இலங்கையுடனான இராஜதந்திர உறவை வலுப்படுத்த ஜப்பான் நடவடிக்கை

இலங்கையுடனான நீண்டகால இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, வலய மறுசீரமைப்பு தொடர்பான ஜப்பானின் இராஜாங்க அமைச்சர் கொசோ யமமொதோ (Kozo Yamamoto) குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொருளாதாரமும் முன்னேற்றமடைந்து வருகின்றது. இதனால் ஜப்பானிய வர்த்தகர்களுக்கு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சிறந்த பின்னணி உருவாகியுள்ளதென ஜப்பானின் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், கைத்தொழில் மற்றும் வேறு துறைகளில் ஜப்பான் பெற்றுள்ள அனுபவங்கள் மூலம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் என வலய மறுசீரமைப்பு குறித்த ஜப்பானின் இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியிடம் கூறினார்.

2015ஆம் ஆண்டிற்கு முன்னர் நாட்டில் நிலவிய 7 சதவீத பொருளாதார வளர்ச்சி வீதம் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளமையை ஜனாதிபதி ஜப்பானிய இராஜாங்க அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதுடன், அதனைக் கட்டியெழுப்புவதே தான் எதிர்நோக்கியுள்ள முதன்மை சவாலாகும் எனத் தெரிவித்தார்.

உயர் தொழில்நுட்பத்துடனான கைத்தொழில் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை நாட்டிற்கு பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ஜப்பான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து ஜப்பானிய வர்த்தக சமூகத்தின் மத்தியில் இலங்கையின் நன்மதிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் கொசோ யமமோடோ தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்