சர்வதேச நாடுகளின் ஆதரவை இழப்பீர்கள் – கோட்டா அரசுக்கு மங்கள எச்சரிக்கை

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் சர்வதேச நாடுகளின் ஏகோபித்த ஆதரவுடன் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசு தவறுமேயானால், அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயற்பட்ட அனைத்து நாடுகளினதும் ஆதரவையும் இந்த அரசு இழக்க வேண்டி ஏற்படும்.”

– இவ்வாறு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

” 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் முடிவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் எமது நாடு சர்வதேச அரங்கில் தோல்வியடைந்திருந்தது; அவமானப்பட்டிருந்தது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது நல்லாட்சி அரசில் இலங்கைக்கு எதிரான ஐ,நா. தீர்மானங்களின் கனதியைக் குறைத்து எமது இணை அனுசரணையுடன் சர்வதேச நாடுகளின் ஏகோபித்த ஆதரவுடன் புதிய தீர்மானத்தை நிறைவேற்றி இலங்கையைக் காப்பாற்றியிருந்தோம். அந்தப் புதிய தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இரண்டு தடவைகள் கால அவகாசத்தையம் பெற்றிருந்தோம்.

மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த 2019 நவம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  தலைமையில் புதிய ஆட்சி வந்தது. கனதி குறைந்த ஐ,நா. தீர்மானத்தையாவது புறந்தள்ளாமல் நிறைவேற்ற வேண்டியது கோட்டாபய அரசின் பொறுப்பாக இருக்கின்றது.

அந்தத் தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு கோட்டாபய அரசு தவறுமேயானால் சர்வதேச நாடுகளின் ஆதரவை இழக்க வேண்டி வரும். அதேவேளை, மீண்டும் இறுக்கமான தீர்மானத்துக்குள் இலங்கை சிக்கவேண்டி வரும். ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளின் பிரகாரம் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்