அகப்பட்டார் மாவை; அரசியல் சூழ்ச்சியில்….!

– காலிங்கன் –

சூழ்ச்சிகள் நிறைந்தது அரசியல் என்பார்கள். அரசியலில் உள்ளவர்கள் காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமாபாதங்களுக்கு ஆட்பட்டவர்களாகவே நிச்சயம் இருப்பர். அதிலிருந்து மீள அவர்களால் முடியாது. உதாரணத்துக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வனை நோக்குவோம். ஓர் புகழ்பூத்த நீதியரசராக சமூகத்தில் நன்மதிப்புடன் வாழ்ந்தவர் அவர். சிவனே என்று தினமும் சிவன்நாமத்தை உச்சரித்து ”

மாசிலாத மணிதிகழ் மேனியில்

பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள்’‘  என்பதற்கிணங்க அகமும் புறமும் தூய்மையாக வாழ்ந்தவர் அவர். தமது கட்சியின் வாக்குவங்கியை அதிகரிப்பதற்காக சம்பந்தன், சுமந்திரனால் வலிந்து அரசியலில் இழுத்துவரப்பட்ட பின்னர் அரசியல் என்ற மாயைக்கடலில் மூழ்கிய அவர் பஞ்சமாபாதங்களுக்கும் ஆட்பட்டு தற்போது விடுபடமுடியாமல் தவிக்கிறார். ஏன், சுமந்திரன்கூட 2010 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி வழக்கு ஒன்றுக்காக சட்டவாளராக வந்தவரை, சம்பந்தன் வலிந்து அரசியலில் புகுத்தினார். இன்று அவரும் இதே நிலைமைதான். ”நான் தீர்வு வராவிட்டால் அரசியலை விடுவேன்,  தீர்வு வந்தாலும் விடுவேன் அதற்குப் பின்னர் எனக்கு இங்கு வேலை இல்லை” என்று பல கதைகளை பேச்சளவில் அவிழ்த்துவிட்டாலும் அவரால் விடுபடமுடியாதென்பதுதான் உண்மைநிலை. அவரும் பஞ்சமாபாதங்களுக்கு ஆட்பட்டுவிட்டார். சுருக்கமாக அரசியல் பற்றிய எனது கருத்தைக் கூறினால், அரசியலில் எமக்கு நாமே மாலையைத் தூக்கி மாட்டிக்கொள்தல் வேண்டும். மற்றவர்கள் போடுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஏறும்போது காலை இழுத்து வீழ்த்துவதற்குத்தான் பலர் உள்ளார்கள். அவ்வாறு சூழ்ச்சிகள் நிறைந்தது அரசியல். இதில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவையைச் சூழ்ந்துள்ள அரசியல் சூழ்ச்சியை நோக்குவோம். வெளிப்படுத்துவது நாங்கள் சுதாகரிப்பது அவர்தானே!

இந்த ஆண்டு தேர்தல் திருவிழாவுக்குரிய ஆண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளுக்கிடையில் பலப்பரீட்சை நடத்துகின்ற தேர்தல், பொதுத் தேர்தல் ஆகும். 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பலப்பரீட்சையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்தார். இதனால் அவரது கட்சி கூட்டமைப்பைவிட்டே வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இன்று சுமந்திரன் வகிக்கும் ஊடகப் பேச்சாளர் பதவியில் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுரேஷ்பிரேமச்சந்திரன் வகித்தவர். கூட்டமைப்பில் இருக்கும்போது கம்பீரமாக இருந்தவர் வெளியே சென்றதும் செல்லாக்காசாகிவிட்டார்.  அவர் பாவம். அவ்வளவுக்கு முக்கிய தேர்தல் இந்த நாடாளுமன்றத் தேர்தல்.

எந்தத் தேர்தலுக்கும் இல்லாத முக்கியத்துவம் இந்தத் தேர்தலுக்கு உண்டு. கூட்டமைப்பின் பங்காளிகள் அடிபட்டு வடக்குக் கிழக்கின் சகல தேர்தல் மாவட்டங்களுக்கும்  ஒருமாதிரி சுமுகமாக ஆசனங்களைப் பங்கிட்டுவிட்டார்கள். ஆனால், இன்னும் வேட்பாளர்கள் யார் யார் என்பதுதான் வெளிவரவில்லை. கடந்தமுறை பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு – கிழக்கில் 16 ஆசனங்களைக் கைப்பற்றியது. அதில் ஈ.பி.ஆர்.எல்.எவ். சிவசக்தி ஆனந்தன், புளொட் வியாழேந்திரனைத் தவிர 14 பேரும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார்கள். இவர்களில் பங்காளிகளான புளொட் தலைவர் சித்தர், ரெலோ தலைவர் செல்வம் ஆகியோருக்கு ஆசனம் உறுதி. ஆனால், தமிழரசுத் தலைவர் மாவையின் ஆசனம்தான் கேள்விக்குறியில் உள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசாவுக்கு இளைஞர், யுவதிகளை அரசியலில் முன்னுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதில் ஓர் அலாதிப்பிரியம். அவருக்கு ஏதாவது கூட்டங்களில் இளைஞர், யுவதிகளைக் கண்டாலே ஒரு கிளுகிளுப்பு ஏற்படும். அதேநேரம் தனக்குப் பின் தனது வாரிசையும் அரசியலில் ஓர் இருப்பை ஏற்படுத்தவேண்டும் என்பதும் அவரது நோக்கம். வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதற்காக தான் ஒதுங்குகிறார் எனவும் தீர்மானித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுகிறார் எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் அடுத்த தலைமுறையிடம் கட்சித் தலைமையை ஒப்படைக்குமாறும் அவர் சம்பந்தனிடம் கோரியிருந்தார். வைத்தியர் சத்தியலிங்கத்தை கட்சித் தலைவராக்குவது அவரது உள்நோக்கமாக அமைந்தது. இந்தவிடயம் தொடர்பாக அவர் யாருக்கும் தெரிவிக்கவில்லை. சத்தியலிங்கத்துக்கு மட்டும் தொலைபேசியில் தெரிவித்திருந்தார். கடந்த மாநாட்டில் கட்சி உறுப்பினர்களின் வலியுறுத்தலால் அவர் மீண்டும் தலைமையை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் தனது இடத்தை இளைஞர் ஒருவருக்கு வழங்கலாம் என்ற ஓர் எண்ணம் அவரது ஆழ்மனதில் உள்ளது. இந்த விடயத்தை கெட்டியாகப் பற்றிப்பிடித்த ‘சுமா குறூவ் ஒவ் கம்பனி’, தமது சாணக்கிய காய்நகர்த்தல்களை மெல்ல இப்போதே ஆரம்பித்துவிட்டது. மாவை தேர்தலில் போட்டியிடுவாரானால் அவருக்கு விருப்பு வாக்கு மிகவும் குறைவாகவே அமையும். இது அவருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும். அவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரட்டும் என்று தமக்குச் சார்பான – மாவைக்கு எதிரான – ‘தமிழ் பக்கம்’ போன்ற ஊடகங்கள் ஊடாக தகவலைக் கசியவிட்டு, மாவையினதும் மக்களினதும் மனங்களில் ஓர் உளநிலை மாற்றத்தைக் கொண்டுவர முயல்கின்றார்கள்.

2015 பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சியின் மாட்டீன் வீதி முதியோர் இல்லம், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் வெற்றிக்காக உழைத்தார்கள். கட்சித் தலைவர் அதிகூடிய விருப்புவாக்குப் பெறவேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். சுமந்திரன் தமிழரசுக் கட்சிக்குத் தேவையான ஒருவர் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறிவிட்டார். அதேநேரம் சுமந்திரனும், தான் தேர்தலில் தோல்வியுற்றால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன் என்று ஒரு ‘பில்ட் அப்’பை விட்டார். தலைவரின் கூற்றுக்கு மதிப்பளித்தும், சுமந்திரனின் ‘பில்ட் அப்’புக்குப் பயந்தும் மாட்டீன் வீதி முதியோர்கள் விரும்பியோ விரும்பாமலோ சுமந்திரனுக்கு வேலை செய்தார்கள். கிளிநொச்சி தேர்தல் தொகுதி சகல தேர்தல் தொகுதிகளைவிட தொலைவில் உள்ளமையாலும் மாகாணசபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் போன்றவற்றுக்கு கிளிநொச்சி முக்கியமாக அமைந்தமையால் அங்கு ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் அவசியம் கட்சிக்கு உள்ளமையால் சிறிதரனுக்கும் இந்த முதியோர் வேலை செய்தார்கள்.

முதியோர் எதிர்பார்த்தபடியே – அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்த மூவரும் தேர்தலில் முதல்மூன்று இடங்களைப் பிடித்தார்கள். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு முழுமையடையவில்லை. தமிழரசுக் கட்சித் தலைவர் முதலாவது இடத்தைப் பிடிக்கவேண்டும் – வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பெற்ற விருப்பு வாக்குக்கு நிகராக – மாவையின் விருப்பு வாக்கு அமையவேண்டும் என்று பேராசைப்பட்டார்கள். அது நிராசையாகிற்று. சிறிதரனும் சிறு சூழ்ச்சியை மேற்கொண்டார். இவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக சிறிதரன் 72 ஆயிரத்து 58 விருப்பு வாக்குகளும், மாவை சோ.சேனாதிராசா 58 ஆயிரத்து 782 விருப்பு வாக்குகளும் தேர்தலில் முதல் தடவையாகப் போட்டியிட்ட சுமந்திரன் மூன்றாவதாக 58 ஆயிரத்து 43 வாக்குகளும் பெற்றனர். சிறிதரன், கிளிநொச்சி மாவட்டத்தில் பல இடங்களில் தனக்குத் தனித்து வாக்களிக்குமாறு கோரியமையால் மாவை சேனாதிராசாவை விட 13 ஆயிரத்து 876 வாக்குகள் அதிகம் பெற்று யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் முதலிடம் வகித்தார். மாட்டீன் வீதி முதியோரின் விருப்புப்படி யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் அவர்கள் தேர்தல் வேலைசெய்த மூவரும் முதல்மூன்று இடத்தையும் பிடித்தார்கள்.

2020 பொதுத் தேர்தலில் சுமந்திரன் தனி றூட் போடுகின்றார். தனது ‘சுமா குறூவ் ஒவ் கம்பனி’யின் முக்கியஸ்தர்களான சயந்தன், ஆர்னோல்ட் ஆகியோரை தன்னுடள் கூடவே நாடாளுமன்றம் அழைத்துச் செல்வது அவரது நோக்கம். ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியாக நீதிமன்றுகளுக்குச் செல்லும்போது அவரது பயில்களை பக்கத்தில் கொண்டுசெல்லும் சட்டம் படித்த அல்லக்கை நாடாளுமன்றில் இல்லையே என்ற ஏக்கம் சுமந்திரனுக்கு.. நாடாளுமன்றுக்கு உள்ளே தான்தான் தனது பயில்களைக் கொண்டுசெல்லவேண்டும். அதனால், தனது இரு அல்லக்கைகளையும் தேர்தலில் இறக்க சுமந்திரன் திட்டம் தீட்டியுள்ளார். அதேநேரம், 2015 தேர்தலில் வெற்றி பெறுவேனோ என்ற பயத்துடன் மாட்டீன் முதியோரின் அடைக்கலத்துடன் தேர்தலில் நின்ற சுமந்திரன், இனிவரும் தேர்தலில் எவ்வாறாயினும் தான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கையுடன் – இறுமாப்புடன் – தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றார். தனது வெற்றிக்கு மேலும் உறுதிப்படுத்த தென்மராட்சி, யாழ்ப்பாணத் தொகுதிகளில் கணிசமான வாக்கைத் தான் பெற்றுக்கொள்ளவும், தன்னோடு கூடவே வேலைசெய்து தம்மூவருக்கும் உள்ள விருப்புவாக்குகளை வெளியே செல்லாமல் தமக்கே உரியதாக்க இம்மூவரும் இணைந்து கனகச்சிதமாக வேலை செய்வர்.

இதில், மாவையரை தேர்தலில் போட்டியிடாது தடுக்கும் இவர்களின் அடுத்த இலக்கு சிறிதரனை வீழ்த்துவது ஆகும். கிளிநொச்சியில் சிறிதரன் தனிக்காட்டு ராஜா. 2015 பொதுத் தேர்தலில் சிறிதரன் யாழ்.மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகள் பெற்றவர். இது சுமா குறூவ் ஒவ் கம்பெனிக்குப் பெரும் பாதிப்பு. கூட்டமைப்பின் அடுத்த தலைமையை தான் கைப்பற்றவேண்டும் என்று வெளியே காட்டாமல் மனதால் அதற்குரிய கட்டமைப்பை ஏற்படுத்தும் சுமந்திரனுக்கு 2020 தேர்தலில் பெரிய தலையிடியாய் உள்ளவர் சிறிதரன். அவருக்கு கிளிநொச்சியில் மட்டுமன்றி யாழ்.மாவட்டம் முழுவதிலும் ஏகப்பட்ட ஆதரவு உண்டு. அவரது எளிமையான நடை, உடை, அனைவரோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் சுபாவம் ஆகியவற்றால் அவர் மக்கள் மனங்களில் அதிக இடம் பிடித்துள்ளார் இதனால் 2020 தேர்தலில் அவர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார் என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இதனல் கட்சித் தலைமையைக் கைப்பற்றுவதற்கு சுமாக்கு மக்கள் மனதில் அதிக இடம் பிடித்தவர் தரவரிசையில் முதலாவதாக வரமுடியாத நிலைமை.

அதேவேளை, தென்மராட்சி தொகுதியில் சயந்தனுக்கு செல்வாக்கு மிகமிகக் குறைவு. ஆதலால், 1960 ஆம் ஆண்டுக்கு முன்னர் – கிளிநொச்சி தனித் தொகுதி ஆவதற்கு முன்னர் – வி.என்நவரட்ணத்துக்கே அந்தத் தொகுதி மக்களின் வாக்குகள் கிடைத்தன. தற்போது கிளிநொச்சியில் சிறிதரனின் வாக்குகளைச் சயந்தனைக்கொண்டு திருடுவதற்கு சுமந்திரன் திட்டம்தீட்டியுள்ளார். இதன் விளைவாக தற்போது சுமா குறூவ் ஒவ் கம்பனி கிளிநொச்சி மாவட்டத்திலும் தமது அரசியல் சித்துவிளையாட்டை ஆரம்பித்துள்ளது. கடந்தவாரமும் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் இந்த கம்பெனி, அந்தப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு அறிவிக்காமல் மக்களைச் சந்தித்துள்ளது. அதேநேரம் தமது குறூவ் மூவரும் நாடாளுமன்று செல்லவேண்டும், சுமந்திரனுக்கு அதிக விருப்பு வாக்குக் கிடைக்கவேண்டும் என்றால் 2015 தேர்தலில் சுமாவுக்கு முன் உள்ள சிறியையும் மாவையையும் தகர்க்கவேண்டும். இதுதான் அந்த சுமா குறூவ் ஒவ் கம்பெனியின் நோக்கம்.

இதிலுள்ள சட்டச்சிக்கல் என்னவென்றால், மாவை தேர்தல் களத்தில் நிற்பாராகில், அவருக்கென்று தனியானதொரு வாக்கு வங்கி உண்டு. அதனைவிட மாட்டீன்வீதி முதியோர்களும் மாவையருக்கே வேலை செய்வார்கள். இதனால் ‘சுமா குறூவ் ஒவ் கம்பெனி’க்கு மாவை தேர்தல் களத்தில் நின்றால் பாதிப்பு. பெரும்பாலும் கூட்டமைப்புக்கு யாழ்.மாவட்டத்தில் அதிகூடிய ஆசனங்கள் என்று – அவர்களின் 2015 தேர்தல் வாக்குவங்கியை அப்படியே இம்முறையும் விட்டு – கணக்குப் பார்த்தால் 5 ஆசனங்கள்தான் கிடைக்கும். அதிலும் தமிழரசுக்கு 4 ஆசனம். அதில் சிறிதரன் அசைக்கமுடியாத மலை. ஆனால் அவரை வீழ்த்தினால்தான் சுமா முன்னுக்கு வரலாம். இதேவேளை சராவையும் வீழ்த்தவேண்டும். சரவணபவனை கஷ்டப்பட்டு இந்தக் கம்பனி வீழ்த்தினால் ஆர்னோல்ட்தான் உள்ளே செல்லும் சாத்தியம். அப்போ மாவையர் தேர்தலில் நிற்பதை எவ்வாறாவது தடுத்தால்தான் சயந்தனும் ஓரளவு உள்ளே செல்ல வழிவகுக்கும். அல்லாவிடில் சித்தரைத் தகர்க்கவேண்டும். சித்தருக்கு மானிப்பாய் தொகுதி, கோப்பாய் தொகுதி, வலி.வடக்கு ஏன் சகல தொகுதிகளிலும் தர்மரின் பெயரால் ஒரு வாக்கு வங்கி உண்டு ஆதலால் அவரைத் தகர்ப்பதும் கடினம். மாவை, சிறி, சரா என்ற குழையாய் உள்ள மாங்கொத்துக்குக் கல்லெறிந்தால்தான் ஒரு மாங்காய் தவறினாலும் இரண்டாவது விழும். அதிலும் கடந்த தேர்தலில் சுமாவுக்கு முன்னுள்ள – அரசியலில் சுமாவுக்கு சமானமாயுள்ள – மாவை, சிறியை வீழ்த்தினால் நன்று. தவறின் சராவையாவது வீழ்த்தவேண்டும்.  மாற்றுத் தலைமை என்ற பெயரில் முன்னாள் முதல்வர் விக்கியுடன் ஏற்கனவே தேர்தலில் நின்ற 10 பிரபலங்களும் போட்டியிடுகின்றனர்.

ஆகவே, மாவையிலுள்ள குறைபாடாகிய ‘இளைஞருக்கு முன்னுரிமை’ என்பதைப் பயன்படுத்தி, நாடாளுமன்றில் சுமந்திரனின் சகல செயற்பாடுகளுக்கும் தலையசைக்கும் பூம்பூம் மாடுகளான தனது தொகுதியாகிய தென்மராட்சியிலே செல்வாக்கற்ற சயந்தனும் மாநகரசபையில் பட்ஜெட்டை நிறைவேற்றும் ஆளுமையற்ற ஆர்னோல்ட்டையும் நிறுத்தினால்தான் தலையாட்டும் என்பது சுமந்திரன் எண்ணம்.

இவற்றிலிருந்து மாவையர் தன்னை எவ்வாறு சுதாகரிக்கப்போகின்றார்? பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்