காணாமல்போன 3 சிறுவர்களும் இன்று அதிகாலை கண்டுபிடிப்பு! – கோயில் மடத்தில் தூங்கிய நிலையில்

யாழ். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்குப் பகுதியில் காணாமல்போயிருந்த சிறுவர்கள் மூவரும் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று அந்தக் கிராமத்து மக்கள் தெரிவித்தனர்.

சிறுவர்கள் மூவரும் நேற்று மாலை விளையாடச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்தனர்.

இராணுவத்தினரால் அந்தப் பகுதியில் தொடர் தேடுதல் நடத்தப்பட்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்ற சூழலில் சிறுவர்கள் காணாமல்போயிருந்தமை அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து குறித்த சிறுவர்களின் பெற்றோர், உறவினர்கள், கிராமத்து மக்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து அந்தப் பகுதிகள் முழுவதும் நேற்று நள்ளிரவு வரையும் தேடுதல் நடத்தியும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.

இந்தநிலையில், இன்று அதிகாலை நாகர்கோவில் மேற்கு மாணிக்கப் பிள்ளையார் கோயில் மடத்தில் சிறுவர்கள் மூவரும் தூங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் அங்கு வைத்து சிறுவர்கள் மூவரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த சிறுவர்களில் கலியுகமூர்த்தி மதுசன், புஸ்பகுமார் செல்வகுமார் ஆகிய இருவரும் 10 வயதை உடையவர்கள் என்பதுடன் அவர்கள் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் தரம் 5இல் கல்வி பயின்று வருகின்றார்கள்.

அதேவேளை, மற்றைய சிறுவனான சந்தியோகு தனுசன் 17 வயதுடையவர் என்பதுடன் அவர் 10 வயது சிறார்களுக்குரிய பண்பியல்புகளைக் கொண்ட மன நலன் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்