தமிழரசுக்கட்சி யாழ்.மாவட்டக்கிளை சுமந்திரனுக்கு எதிராகப் போர்க்கொடி!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட தொகுதிக் கிளை கூட்டம் நேற்று யாழ்.மாவட்டக்கிளைத் தலைவர் பெ.கனகசபாபதி தலைமையில் நடைபெற்றது.. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின்  “கட்சியின் தனிமனித சாம்ராஜ்ஜியம்” தொடர்பாகப் பலத்த வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றன. பலர் பெயர் குறிப்பிடாமல் சுமந்திரனைக் கடுமையாக சொற்களால் வஞ்சித்தார்கள்.

இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தியொன்றின் அடிப்படையில் இந்த சொற்போர் உருவானது. இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் சரவணபவன் எம்.பியின் பெயரை உள்ளடக்கக் கூடாது என எம்.ஏ.சுமந்திரன், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவை வலியுறுத்தியதாக வெளியான செய்தியே இந்தச் சொற்போருக்கான பிரதான பேசுபொருளாகும்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட தொகுதிக்கிளை கூட்டத்தில்,அந்தச் செய்தியை  சுட்டிக்காட்டி பல உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.

சரவணபவன் எம்.பி அங்கு கருத்து தெரிவித்தபோது, “இனி கட்சிக்குள் தனி மனித சாம்ராஜ்ஜியங்களிற்கு இடமிருக்க முடியாது. இந்த தனி மனித நடவடிக்கைகளால்தான் கட்சி பெரிய சீரழிவை சந்தித்து வருகிறது. இனி இதற்கு இடமளிக்க முடியாது” என்றார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த மாவட்டக்கிளையின் பழைய உறுப்பினர்கள் – சுமந்திரன் அரசியலில் பிரவேசிக்க முதலே – தமிழரசுக் கட்சிக்காகத் தம்மை அர்ப்பணித்து செயற்பட்டவர்கள் – , எம்.ஏ.சுமந்திரனின் பெயரை குறிப்பிடாமல் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தனர்.

தொகுதிக்கிளைகளையோ, கட்சியின் செயற்பாட்டாளர்களையோ கலந்துரையாடாமல் தன்னிச்சையாக செயற்படுவது, குழு அமைப்பது, தமக்கு வேண்டியவர்களை முன்னுரிமையளிப்பது ஆகிய குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைத்தனர்.

வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு தெரிவுக்குழு ஒன்று உள்ளபோதும், அதை யாரும் கணக்கெடுக்காமல் விரும்பிய வேட்பாளர்களை களமிறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொகுதிக்கிளைகளின் முடிவை மீறி, எம்.பிக்கள் தன்னிச்சையாக முடிவெடுத்தால், அதற்கு எதிராக தொகுதிக்கிளைகள் போராட்டம் நடத்துமென்றும் சில உறுப்பினர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து, அனைத்து மாவட்ட வேட்பாளர்களையும் அந்தந்த மாவட்ட தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் என்றும், தனி மனிதர்கள் அல்லர் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், தொகுதிக்கிளைகளை மீறி எம்.பிக்கள் முடிவெடுப்பதாக குற்றம்சுமத்தப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு தொகுதிக்கிளை கூட்டங்களை விரைவாக நடத்தி, அப்பிராயங்களை அறிந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 26ம் திகதி யாழ், மானிப்பாய் கிளையிகளில் கூட்டம் இடம்பெறும்.

இதில் கட்சியின் மாவட்ட எம்.பிக்கள் நால்வரும் கட்டாயம் சமுசமளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் ஓர் உறுப்பினராக உள்ளார். ஆனால், சுமந்திரன் தெரிவுக்குழு உறுப்பினர் அல்லர். இவ்வாறிருக்க, தெரிவுக்குழுவில் உள்ள சரவணபவனை நீக்குவதற்கு சுமந்திரன் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை விநோதமானதொன்றே.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்