கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினர் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளனர். இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தென்மராட்சி, மட்டுவில் சந்திரபுரம் வடக்கு செல்லப்பிள்ளையார் கோயிலடியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவரது மகள், மகளின் கணவர் ஆகிய மூவர் நஞ்சருந்தி உயிரை மாய்க்க முற்பட்டுள்ளனர். இதன்போது தாயார் உயிரிழந்த நிலையில், அவரது மகளும் மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் நவரத்தினம் விமலேஸ்வரி (வயது-65) என்ற தாயார் உயிரிழந்துள்ளார். அவரது மகள் சிவலக்சன் கீர்த்திகா (வயது-35), மருமகன் சிவபாலன் சிவலக்சன் (வயது-35) ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வட்டிக்கு வாங்கிய கடனால் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாகவே இவர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனரென பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்