ரஞ்சனுடன் தொலைபேசியில் உரையாடிய நீதிபதிக்கு குற்றத்தடுப்பு பிரிவு அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டமைக்காக சேவையிலிருந்து நீக்கப்பட்ட பத்தேகம நீதவான் தம்மிக ஹேமபாலவை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பாக அவர் இதுவரை எந்தவித பதில்களையும் வழங்கவில்லை என அந்த பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதன்போது, பல இறுவட்டுக்கள் அவரின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து முன்னைய ஆட்சியின்போது குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான குரல் பதிவுகள் அனைத்தும் பகிரங்கமாகின.

அத்தோடு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை குற்றவாளியாக்கிய வழக்கின் தீர்ப்புக்கு முன்னதாக மேல்நீதிமன்ற நீதியரசர் பத்மினி எம்.ரணவக்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஊடாக அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மேலும் பத்தேகம நீதவான் தம்மிக ஹேமபால மற்றும் எம்பிலிபிட்டி மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மினி என்.ரணவக்க மற்றும் எம்பிலிபிட்டி மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்