அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்

துரித பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே சகல அரச நிறுவனங்களினதும் முதன்மை பொறுப்பாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதும் அரசாங்கத்திற்கு சுமையாக அமையாது இலாபமீட்டுவதும் நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

DSC 6413 தேசிய பொருளாதாரம் மற்றும் பொதுமக்களுக்கான சேவை வழங்கல் ஆகியவற்றிற்கு நேரடி பங்களிப்பினை வழங்கும் அரச கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள் மற்றும் நியதிச் சட்ட சபைகள் ஆகியவற்றின் புதிய தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2005 – 2014 காலகட்டத்தில் எமது நாடு பொருளாதார அபிவிருத்தியில் ஆசியாவில் முதலிடம் வகித்தது. ஆயினும் கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே இன்று எமக்குள்ள பாரிய சவாலாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் செயற்பாட்டில் நவீன தொழில்நுட்பங்கள் உள்ளீர்க்கப்படல் வேண்டும். பயிற்றப்பட்ட தொழிற்படை மற்றுமொரு முக்கிய காரணியாகும். வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு கல்வி முறையிலும் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்போது மூன்றாம் நிலை கல்விக்கு இளைஞர், யுவதிகள் அதிகளவில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டியதன் தேவை குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு சேவையாற்றக்கூடிய மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு பெருமளவு பங்களிப்பு வழங்கக்கூடிய துறைகள் இனங்காணப்பட்டு, அவை முன்னேற்றப்பட வேண்டும். சுற்றுலா சபை, முதலீட்டு சபை போன்ற நிறுவனங்களுக்கு இதன்போது முக்கிய பொறுப்புக்கள் உள்ளன. கடந்த காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து மீண்டு, பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்த நிறுவனங்கள் உரியவாறு பங்களிப்பு வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்