கம்பெரலியா வீரர்களெல்லாம் மீண்டும் மக்கள் பிரதிநிதியாக முடியுமா?

கலாநிதி அகிலகுமாரன் முத்துக்குமாரசுவாமி

” நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்” என்றார் ஒளவையார். மக்கள் சேவை ஆற்றுவதென்பது பிறப்பிலிருந்து – இரத்தத்திலிருந்து – ஊற்றெடுக்கவேண்டும். அவ்வாறான சிறந்த மக்கள் பணியாற்றுபவர்களை இனங்கண்டு – அவர்கள் அரசியலில் நாட்டம் இல்லாவிட்டாலும்  வலிந்து கட்சிக்குள் உள்வாங்கி தேர்தல் களத்தில் நிறுத்தவேண்டும்.

கடந்த 10 வருடங்கள் –   இரண்டு தடவைகள் – எதுவுமாற்றாமல் இருந்தவர்கள் மீண்டும் மக்கள் பிரதிநிதியாகி தமிழீழத்தைப் பெற்றுக்கொடுக்கவோ, அரசியல் கைதிகளை விடுவிக்கவோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை மீட்டுத் தரவோ அல்லது தமது கட்சியின் பெயரைக்காப்பாற்ற ஆகக்குறைந்த சமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவோ முடியாதவர்கள் என்பதை கருத்திற்கொண்டு தாமே அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்வார்களாயின் தமது கௌரவத்தை காப்பாற்றியவர்கள் ஆவர். அல்லது மக்கள் இவர்களை வெளியேற்றினால் அது அசிங்கமாகவே இவர்களுக்கு அமையும்.

தாம்,  தனது அல்லக்கைகளை தன்னோடு இறக்கினால் தமக்கான வாக்கு வங்கியை அதிகரிக்கலாம் என்று சிந்தித்து தேர்தலில் நிற்பாராகின் தமிழ்மக்களின் வாக்குகள் உடைந்து சின்னாபின்னமாகும் என்பதும் வெள்ளிடைமலை.

ஒவ்வொரு கட்சிக்கும் ஆசனப் பங்கீடு என்பதை விடுத்து,கூட்டமைப்பின் பெயரால் வேட்பாளர் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும். வேட்பாளராகப் போட்டியிடுபவர்கள் அந்தத் தெரிவுக்குழுவில் இடம்பெறக் கூடாது. திறந்த அடிப்படையில் வேட்பாளர்களின் விண்ணப்பங்களைக் கூட்டமைப்பு கோரவேண்டும். வேட்பாளருக்குரிய தகுதிகளாக: கட்சிக்கான அர்ப்பணிப்பு,, தன்னலம்கருதா சமூகசேவை, கல்வி, தலைமைத்துவம், ஆளுமை, என்பவற்றின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு பக்கச்சார்பற்ற முறையில் தெரிவு இடம்பெற்று தெரிவுக்குழுவின் முடிவே இறுதியானதாகக் கருதி வேட்பாளர்களைக் களத்தில் இறக்கவேண்டும். கட்சித் தலைமைகளின் செல்வாக்கு இந்த விடயத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. இவ்வாறு வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டால் மட்டுமே அனைத்து கட்சிகளும் இணைந்து ஓரணியில் போட்டியிட்டு தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த முடியும்!

மறந்தும்கூட உண்ட கையால் காகம் கலைக்காதவர்கள் – இன்றைக்குத் தமிழ் மக்களின் அவலநிலைக்குக் காரணமானவர்கள் இந்தத் தேர்தலில் சுமந்திரன் தெரிவித்தமை போன்று தகுதியானவர்களுக்கு – இளைஞர், யுவதிகளுக்கு வழிவிடவேண்டும்.

அரசியலுக்கு வந்து மக்கள் மனங்களை வெல்வேன் என்று கூறுபவர்கள் அரசியலில் இருந்தும் மக்கள் மனங்களை வெல்லத் தவறியவர்கள் கூட்டமைப்புக்குள் வேண்டவே வேண்டாம். மக்கள் மனங்களை வென்ற பலர் எமது சமூகத்தில் உள்ளார்கள். அவர்களை இனங்கண்டு தேர்தலில் வலிந்து இறக்கவேண்டும்.

உதாரணத்துக்கு சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் ஆற்றுகின்ற மக்கள் பணிக்கு எமது எந்த அரசியல் தலைவர்களும் ஈடாகர். கொழும்பில் கே.வி.தவராஜா எவ்வித பறைசாற்றல்களும் இன்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட எத்தனையோ தமிழ் இளைஞர்களின் விடுவிப்புக்கு உதவி வருகின்றார்.. இவர்கள் வெறும் உதாரணத்துக்காகக் கூறப்பட்டவர்கள்தாம்.

சம்பந்தன் கூறிய படித்த இளைஞர், யுவதிகளையும், மாவைகூறிய மக்கள் சேவைக்காக தம்மை அர்ப்பணிப்பவர்கள், மக்களைக் கவரக்கூடிய இளந் தலைமை, போராட்டத்துக்காகத் தங்களை அர்ப்பணிக்கக்கூடியவர்கள், விடுதலைதான் ஒரே லட்சியம் என்று செயற்படுபவர்கள், தியாகம் செய்யக்கூடியவர்கள், சுமந்திரன் கூறிய தகுதியுடையவர்களையும்  உள்வாங்க ஒரேவழிதான் எனது அறிவுக்கெட்டியவகையில் உண்டு. அவ்வாறு செயற்பட்டால்மட்டுமே தமிழர்கள் ஓரணியாக நிற்கமுடியும்.

சுமந்திரன் தெரிவித்தமை போன்று அனைவரையும் கூட்டமைப்பில் இணைத்துவிட்டு ஆசனம் வழங்காதுவிட்டால் அவர்கள் மீண்டும் வெளியேறத்தான் செய்வார்கள். இருக்கும் 10 ஆசனத்துக்கு 30 இற்கும் மேற்பட்ட பிரபலங்கள். அதிலும் முன்பிருந்த ஐவரும் மறுபடியும் இம்முறையும் களமிறங்கத் துடிப்பு? இந்த ஐவரும் வெல்வதற்காக தோல்வியடையக் கூடியவர்கள் எனத் தெரிந்து தோல்வி வேட்பாளர்கள் ஐவர் களததில் இறங்குவர். இந்த ஐவரும் முன்னைய ஐவரை விட சகலதிலும் தகுதியற்றவர்களாகவே காணப்படுவர். இவ்வாறு இருந்தால் எவ்வாறு தமிழ்மக்கள் ஒற்றுமைப்பட்டு ஓரணியாக நிற்பது?

வடக்கு – கிழக்குத் தமிழருக்கு முக்கிய ஒரு தேர்தலாக வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் கருதப்பட உள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஒற்றுமையைப் பற்றித் தெரிவித்து தாம்தான் மக்கள் பிரதிநிதிகள். ஆகவே, அனைவரையும் தம்மோடு இணைந்து பயணிக்குமாறு கூறியிருக்கின்றார். 1977 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழ் மக்கள் ஒன்றுபடவேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்து தமிழர் விடுதலைக்கூட்டணியை உருவாக்கினார். அந்த நேரத்தில் அவர் கூட்டணியை உருவாக்க செய்த தியாகங்கள், விட்டுக்கொடுப்புகள் அளப்பரியன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபகத் தலைவர்களாக தந்தையுடன், ஜி.ஜி., சௌமியமூர்த்தி தொண்டமான் என மூவர் இருந்தார்கள். தந்தை போன்றதொரு கருத்தை சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தாலும் உண்மை, நேர்மை, விசுவாசம், இதயசுத்தியுடன் செயற்பட அவர் தயாரா என்ற கேள்வி மாற்றுக்கட்சித் தலைமைகளிடம் எழாமல் இல்லை.

அவர்களுக்கு அவ்வாறானதொரு ஐயம் வருவதற்குக் காரணம், சுமந்திரனின் இந்த அறிவிப்பு வந்து ஒருவாரத்துக்குள்ளே கூட்டமைப்பு பங்காளிகளுக்கான ஆசனங்கள் பங்கிடப்பட்டுவிட்டன. தமிழரசு தவிர்ந்த இரு கட்சிகளின் வேட்பாளர்களும் ஓரளவு மக்களால் ஊகித்தாயிற்று. அப்போ, விக்கி தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ், ஐங்கரநேசனின் பசுமை இயக்கம், சிறிகாந்தா – சிவாஜி அணி, அனந்தி சசிதரன் அணி என்பன இவர்களுடன் சேர்ந்து வெறும் ஆதரவை மட்டும் இவர்களுக்கு வழங்குவதா? என்ற கேள்வியும் மாற்றுக் கட்சிகளிடமும் மக்களிடமும் எழாமல் இல்லை.

இருப்பது யாழ்.மாவட்டத்தில் வெறும் 10 ஆசனங்களே! அதிலும் வெற்றி ஆசனங்கள் வெறும் 7 மட்டுமே. இதற்குள், இரு பெரும்பான்மைக் கட்சிகளும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் போட்டி வேறு. கடந்த தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒவ்வொரு ஆசனங்களை யாழ்.மாவட்டத்தில் கைப்பற்றின. இந்த நிலையில் மிகுதி 5 ஆசனத்துக்கு கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் போட்டி.

கடந்தமுறை நாடாளுமன்றத்துக்கு போட்டியிட்ட அனைவரும் மீண்டும் தேர்தலில் நின்றால் படித்த இளைஞர் யுவதிகளுக்கு எவ்வாறு ஆசனம் வழங்குவது? பழையவர்கள் புதியவர்களுக்கு வழிவிட்டு அவர்களை வழிநடத்துபவர்களாக இருக்கவேண்டும்.

உண்மையில் மக்கள் பிரதிநிதிகளை நிர்ணயிக்கும்  அரசியலில் தகுதி எனப்படுவது மக்கள் சேவையே ஆகும்..  கம்பெரலியா வீரர்களை விடுத்து மக்கள் சேவகர்களைக் களத்தில் நிறுத்தினால்மட்டுமே தமிழ்மக்கள் ஒற்றுமையாக – ஓரணியாக – வாக்களிப்பர் என்பது தெளிவு.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்