காணாமல்போனோரை மண்ணுக்குள் புதைத்தவர், இடம் விமலுக்கு தெரியும்! நாடாளுமன்றில் சரவணபவன் காட்டம்

“காணாமல் ஆக்கப்பட்டோரை மண்ணுக்குள் தான் தேடவேண்டும் எனத் திமிர்தனமாகச் சொன்ன விமல் வீரவன்சவுக்கு, அப்படிக் காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கு புதைக்கப்பட்டனர் என்பதையும், யாரால் புதைக்கப்பட்டனர் என்பதையும் நன்கு அறிந்திருப்பார். எனவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ராஜபக்சக்கள் மட்டுமல்ல,விமல் வீரவன்சவும் பொறுப்புக் கூற வேண்டும்”

– இவ்வாறு நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது-

“வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், காணாமலாக்கப்பட்டோரை தேடித்தரும்படி கோரி நடத்தும் போராட்டம் ஆயிரம் நாட்களைத் தாண்டி மேலும் மாதங்களால் விரிவடைந்து செல்லும் இக்காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டோரென எவரும் இல்லை எனவும், அப்படி யாராவது காணாமலாக்கப்பட்டிருந்தால் அவர்கள் புலிகளால கடத்திச் செல்லப்பட்டவர்களாக இருக்கக்கூடுமெனவும், அவர்கள் இறந்திருக்கலாமெனவும் ஜனாதிபதியால் கருத்துவெளியிடப்பட்டிருந்தது.

அதையடுத்து சில நாள்களில் அமைச்சர் விமல் வீரவன்ச  காணாமல் போனோரென எவருமில்லை எனவும் காணாமல்போனோர் தொடர்பாக பொறுப்புக்கூறவேண்டிய தேவை ராஜபக்சக்களுக்கு இல்லை எனவும் தேவையானால் காணாமல்போனோரை மண்ணுக்குள் போய் தேடும்படியும் திமிர்தனமான முறையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

காணாமல்போனோர் இறந்துவிட்டார்கள் எனவும் மண்ணுக்குள்தான் அவர்களை தேடவேண்டுமெனவும் திட்டவட்டமாக வீரவன்ச  கூறும் நிலையில் காணாமல்போனவர்கள் கொல்லப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுவிட்டனர் என்ற கருத்து வெளிப்படுத்தப்படுகிறது. எனவே காணாமல்போனவர்களை கொலைசெய்து புதைத்தவர்கள் யாரென்பது நிச்சயமாக விமல் வீரவன்சவுக்கு தெரிந்திருக்கவேண்டும் அல்லது கொன்று புதைத்தவர்களில் அவரும் ஒருவராக இருக்கவேண்டும். எனவே காணாமல்போனோர் தொடர்பாக பதில் சொல்லவேண்டியவர்கள் ராஜபக்சக்கள் மட்டுமல்ல விமல் வீரவன்சவும் கூடத்தான் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்க இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது காணாமல்போனோர் தொடர்பாக கருத்துவெளியிடும்போது காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தவேண்டிய கடாப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டெனவும், அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் எதிர்பார்க்கின்றன என தெரிவித்திருந்தார். அவர் அண்மையில் காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும் அலுவலக அதிகாரிகளுடன சந்திப்பை நடத்திய பின்பே இக்கருத்தை வெளியிட்டிருந்தார்.

கடந்த வாரம் ஜனாதிபதியாலும் அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்சவாலும் வெளியிடப்பட்ட கருத்துகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதியால் வழங்கப்பட்ட பதிலடியே இது என கருதவேண்டியுள்ளது.

இவ்வாறு ஜனாதிபதியின் கருத்துக்கு சர்வதேசமட்டத்தில் வலிமையான மறைமுக கண்டனம் முன்வைக்கப்பட்டபோதிலும் அமைச்சர் வீரவன்ச காணாமல்போனோரை மண்ணுக்குள் தேடும்படி கூறியவிடயம் முழு சர்வதேசத்தையும் உதாசீனம் செய்வதும் மனிதகுல மனச்சாட்சியைக் குழிதோண்டி புதைப்பதுமான ஈனமான செயலென்றே நாம் கருதுகிறோம். இவை வெறும் கிணற்றுத்தவளையின் கூச்சலாக இருந்தபோதிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் இதயங்களை கீறிக்கிழிக்கும் கொடூரமான செயல் என்றே அடித்துக்கூறுகிறோம்.
அமைச்சர் விமல் வீரவன்ச எந்த நாட்டின் தீவிர பற்றாளர் எனக்கூறுகிறாரோ அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு விரோதமாகச் செயற்படும் போலித்தேசியவாதியென்பதை பலமுறை நிரூபித்துள்ளார்.

அண்மையில் மன்னாரில் ஒரு நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தமைக்காக அதை திரை நீக்கம் செய்யமறுத்து பின்பு சிங்களத்தில் முதலிடம் கொடுத்து எழுதப்பட்ட பெயர்பலகையை அந்த இடத்தில் நிறுவி அதைத்திறந்து வைத்தார். இலங்கை அரசியலமைப்பின்படி இலங்கையில் சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகள் என்பதும் வடக்கு கிழக்கில் தமிழ் நிர்வாக மொழி என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் ஆகும். எனவே வடக்கில் ஒரு நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதலிடம் கொடுத்தமைக்காக பெயர்ப்பலகையை நீக்குவது அப்பட்டமாக அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும்.
இவர் ஏற்கனவே போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை மறந்துவிடமுடியாது.

இந்தபோலித்தேசியவாதி இலங்கையின் சட்திட்டங்களை பகிரங்கமாகவே இருமுறை மீறியுள்ளார். இவ்வாறு தனது தாய்நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காத இவர் தமிழ்மக்களுக்கு விரோதமான இனவெறி நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் தன்னை சிங்கள மக்களின் வீரநாயகனாக காட்டமுயன்று வருகிறார்.

ஆனால் காணாமல்போனோர் விவகாரம் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு உட்பட்டதென்பதும் அதற்கு இலங்கை அரசு அனுசரனை வழங்கியுள்ளது என்பதும் முக்கியமான விடயங்களாகும். அதை மறுதலிப்பதென்பது சர்வதேசத்திற்கு சவால்விடும் ஒரு முட்டாள்தனமான நடவடிக்கையாகும். அதிகாரபீடங்களுக்கு அடிவருடுவதன் மூலம் உள்ளூர் சட்டதிட்டங்களை மீறிவிட்டு தப்பிவிடலாம் ஆனால் சர்வதேசமட்டத்தில் என்றோ ஓர் நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

காணாமல்போன தனது பிள்ளைகளுக்காக ஏங்கும் தாயின் வேதனையை காணாமல் போன தன மகனுக்காக துடிக்கும் தந்தையின் ஏக்கத்தை காணாமல்போன தன கணவனுக்காக வாழ்வையே இழந்து தவிக்கும் மனைவியின் துயரத்தை உணரமுடியாதவர்கள் அரசியல் அதிகாரத்தில் வீற்றிருக்கும்வரை நீதியைத் தேடுவது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ஆனால் இவர்களினதும், இவர்களை வழிநடத்தும் மதவெறியர்களினதும் இவர்களின் அடிவருடும் இனவெறியர்களினதும் வீரநாயக வேடம் அம்பலப்படும்போது இவர்கள் சிங்கள மக்களாலேயே விரட்டிஅடிக்கப்படுவார்கள்.

‘ஏழை அழுத கண்ணீர் கூறிய வாளை ஒக்கும்’, என தமிழில் ஒரு பழமொழி உண்டு. வலிந்து காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகள் வடிக்கும் கண்ணீர் ஒரு நாள் வாளாக மாறும்போது இவர்கள் அனைவரும் பதில் சொல்லியே ஆகவேண்டும். ” என்று அவர் தெரித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்