இணுவையூர் பண்டிதர் பஞ்சாட்சரத்துக்கு தமிழுக்கு பெருமைசேர் ஆளுமை விருது!

தமிழ்த் தேசிய உணர்வாளன், தமிழ் ஆசான், தமிழின் பெருமை பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களின் தமிழுக்கான சேவையைப் பாராட்டி இவ்வாண்டின் “தமிழ் பெருமைசேர் ஆளுமை” விருதை தமிழியல் விழா 2020 இல் வைத்து கனடிய தமிழர் தேசிய அவை வழங்கி, தமது அவைக்குப் பெருமை சேர்த்துள்ளது.

பஞ்சாட்சரம் அவர்கள் தமிழுக்குச் செய்துவரும் சேவை அளப்பரியது.

நூலாசிரியராக, கவிஞராக, தமிழாசானாக தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஆற்றிவரும் பணிகள் அளவிடமுடியாதவை.

புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் வழங்கப்பட்ட ஞான ஏந்தல், கவிஞானி, இனமான வேளம், ஈழத்து இளங்கோ, வித்தியா பூசனம், இந்துவின் மகுடம் போன்ற பட்டங்களுக்கெல்லாம் பெருமை சேர்த்தவர்.

தமிழ்த் தேசியத்தின்மீது தளராத பற்றுக்கொண்ட இவருடைய ஆக்கங்களுக்கு எல்லாம் மணிமகுடம் வைத்தாற்போல் இவர் எழுதிய “பிரபாகரன் பெருங்காப்பியம்’  விளங்குகிறது. 1300 மரபுக் கவிதைகளாலான இக்காப்பியம் மூன்று பாகங்களாக ஆக்கப்பட்டுள்ளது. இவருடைய சேவை கொண்டாடி மதிப்பு அளிக்கப்பட வேண்டியதொன்றே – – என்று கனடிய தமிழர் தேசிய அவை இணுவையூர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களுக்குரிய வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கனடா தமிழர் மாநாட்டு அமைப்பால் 2020 ஆம் ஆண்டுக்கான 2 ஆவது தமிழர் மாநாடு கடந்த முதலாம் திகதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் வைத்து ச.வே.பஞ்சாட்சரம் ஐயாவுக்கு ”தமிழ் மரபுக் காவலர்” என்னும் உயர் கௌரவம் வழங்கிக் கௌரவிக்ப்பட்டது.

தன் உடலில் ஓடும் இரத்தத்தில் தமிழ் உணர்வுகொண்ட – செந்தமிழில் சொல்லடுக்கி தமிழர்தம் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் புகழுரைக்க 1300 மரபுக்கவிதைகள் ஊடாக ஒவ்வொரு தமிழனிடமும் உறங்கிக் கிடந்த தமிழுணர்வைத் தட்டிடியழுப்பி வீரியமுறச்செய்த ச.வே.பஞ்சாட்சரம் ஐயா அவர்கள் தமிழ் சி.என். குழுமத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் போசகருமாவார். இவருக்கு – இவரது தமிழ்ப் பணிக்கு – இவ்வாறான உயரிய விருது கிடைக்கப்பெற்றமையையிட்டு தமிழ் சி.என்.என். குழுமம் மனம்மகிழ்வடைவதுடன் அவரை வாழ்த்துகின்றது.

தமிழ் சி.என்.என். நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் மாமனாராகிய பஞ்சாட்சரம் ஐயாவுக்கு அவரும் தனதும் தன் குடும்பம் சார்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்