அரசின் தற்போதைய செயற்பாடுகள் போன்றவையே பிரபாகரனையும் ஆயுதமேந்தத் தூண்டின – சாள்ஸ்

தேர்தலின் பின்னர் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் சில செயற்பாடுகள் வேதனையளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன.

வவுனியா – தச்சங்குளத்தில் உள்ள காணிகளில் பெரும்பான்மை மக்களை குடியேற்றும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. வவுனியா மாவட்ட அபிவிருத்தி சங்கத் தலைவரால் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

தமிழர்களின் காணிகள் அபகரிக்க முற்படுவதை அரசாங்கத்தில் அமைச்சர்களாகவுள்ளவர்கள் கண்டுகொள்ளவில்லை. குறித்த அமைச்சர் வடக்கில் சோதனை சாவடிகள் இல்லையென கூறிகிறார். பிரதமரிடம் நற்பெயரை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக அவர் அவ்வாறு கூறுகிறார்.

தமிழர்களின் காணிகளை திட்டமிட்டு பறிப்பதும் அதில் சிங்களவர்களை திட்டமிட்டு குடியேற்றுவதும் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பிரபாகரன் இல்லை என்பதால் தமிழிர்கள் இனி ஆயுதமேந்தி போராட முடியாதென அமைச்சர் ஒருவர் கூறுகிறார். உண்மையில் ஆயுதமேந்தி போராடும் தேவை பிரபாகரனுக்கு இருக்கவில்லை.

அவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளியது இவ்வாறான காரணிகள்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்