போராட்டக் காலத்தின் திரைத் துறைப் படைப்பாளி முல்லை யேசுதாஸன் காலமானார்

போராட்டக் காலத்தில் திரைப்படத் துறையில் ஏராளனமான குறும்படங்களை இயக்கியவரும் பெருமளவான முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவரும் எழுத்தாளருமான முல்லை யேசுதாஸன் மாரடைப்பினால் காலமானார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவர் பணியாற்றும் தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து நேற்று முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் உள்ள தனது இல்லத்திற்கு அவர் சென்றிருந்தார்.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் மாரடைப்பினால் அவதியுற்ற நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இடைநடுவே உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த யேசுதாஸன் சாமி ஐயா என்று துறைசார்ந்தவர்களால் அறியப்பட்டுவரும் அவர் 90களில் இருந்து இன்றுவரை ஏராளமான குறும்படங்களில் நடித்திருந்தார். பெருமளவான சிறுகதைகளை எழுதியுள்ள அவர் “நீலமாகிவரும் கடல்” சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தார்.

தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிவந்த அவர் குறித்த தொலைக்காட்சியில் மண்வாசனை சார்ந்த படைப்புக்களை வெளிப்படுத்திவந்தார்.

தென்னிந்தியாவின் பிரபல இயக்குநர் மகேந்திரன், சமாதான காலத்தில் கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது அங்கு மேற்கொண்ட சினிமா சார்ந்த களப் பயிற்சிகளின்போதும் குறும்படங்கள் உருவாக்கத்தின் போதும் பிரதி சார்ந்த பங்களிப்புக்களை நல்கியதுடன் நடித்தும் இருந்தார்.

இதேவேளை, முல்லை யேசுதாஸனின் மகன் ஒருவர் போரில் உயிர் துறந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்