குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க!

எயார் பஸ் மோசடியில் ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பிரான்ஸ் நாட்டு நிறுவனமொன்றுடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பாக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இதற்கு எதிராக வட்ட நவடடிக்கைகளை முன்னெடுக்க போதிய தகவல்கள் கிடைத்தும் அவற்றை மூடிமறைத்துள்ளது.

இருந்தபோதும் தற்போது ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கும் இந்த ஊழல், மோசடிகள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு சட்ட மாஅதிபர் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையும் இந்த விடயம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு முறைப்பாடொன்றை தெரிவித்திருக்கின்றது.

பிரித்தானிய க்ரவுன் நீதிமன்றத்தின் வெளிப்படையான தீர்ப்பின் பின்னர் இதுதொடர்பான ஆவணங்களை பிரித்தானியாவின் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.

சட்ட ரீதியான நடவடிக்கைகளின் பிரகாரம் பொறுப்புக்கூறும் தரப்பிடமிருந்து இழப்பீட்டை பெற்றுக்கொள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் எதிர்பார்கிறது.

ஸ்ரீலங்கன் நிறுவனம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழுவுக்கு ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் அதிகாரிகள் பல தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக நீண்டகாலம் விசாரணைகள் நடைபெற்றுள்ளன. சட்ட மாஅதிபருக்கும் அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்