மூன்று நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்கத் தீர்மானம்!

இலங்கை கிரிக்கட் சபை உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாடாளுமன்றம் மீண்டும் கூடவிருக்கும் 18ஆம், 19ஆம், 20ஆம் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தேசிய லொத்தர் சபை மற்றும் இலங்கை கிரிக்கட் ஆகிய நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட மத்திய வங்கியின் திறைசேறி முறி தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் தடயவியல் கணக்காய்வு அறிக்கை, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸுக்கு எயார் பஸ்களை கொள்வனவு செய்தமை தொடர்பாக வெளிநாட்டில் வழங்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு உள்ளிட்ட விடயங்களையும் கோப் குழுவில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.

விசேடமாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற எயார் பஸ் கொள்வனவு மற்றும் அதற்கான கொடுக்கல்வாங்கல் குறித்து கோப் குழுவினால் தயாரிக்கப்பட்ட இரு அறிக்கைகள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மத்திய வங்கியின் திறைசேரி முறி தொடர்பாக கோப் குழுவின் விசாரணைகளில் வெளியான விடயங்களே, திறைசேரி முறி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் தடயவியல் கணக்காய்வு ஆய்வுகளின் மூலமும் புலப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் கோப் குழுவின் செயற்பாடுகளுக்கு ஊடகங்கள் வழங்கிய ஒத்துழைப்புத் தொடர்பாக நன்றி தெரிவித்து கொள்கின்றோம். அத்துடன், தொடர்ந்தும் ஊடகங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

கோப் குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் விடயத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளாதிருக்கும் சம்பிரதாயத்தை கோப் குழு உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் தொடர்ந்தும் பேண எதிர்பார்க்கின்றோம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்