அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற வாழைச்சேனை ஆயிஷாவின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டி.

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு வியாழக்கிழமை (6) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எஸ்.கே.ரகுமான், எம்.யூ.எம்.இஸ்மாயில், ஏ.எம்.எம்.ஜாபீர் கரீம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம்.இம்தியாஸ், எம்.தையூப், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

பாடசாலை உருவாக்கம் பெற்று பதினொரு வருடங்களின் பின்னர் நடைபெற்ற முதலாவது இல்ல விளையாட்டு விழாவை பார்வையிட பெருந்திரளான பெற்றோர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இறுதிநாள் நிகழ்வில் விநோத உடை, அஞ்சல் ஓட்டம், உடற் பயிற்சி கண்காட்சி, குறுக்குப் பாய்ச்சல் ஓட்டம், தடைதாண்டல் ஓட்டம் போன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அனைவரினதும் பாராட்டுக்களைப் பெற்ற இவ் விளையாட்டு நிகழ்வில் றவ்லத் இல்லம் 383 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும், ஜன்னத் இல்லம் 366 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், மில்லத் இல்லம் 335 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், அணிகளுக்கும் கிண்ணங்களும், சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்