பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு, நோய்த்தொற்று இல்லை என வைத்தியசாலை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பரிசோதனைகளின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மொனராகலை பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி, சீனாவில் கல்வி கற்றுவந்த நிலையில், நாட்டுக்கு மீண்டும் வருகை தந்திருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான நோய் அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பரிசோதனைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் கடந்த 5ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, 22 வயதுடைய குறித்த யுவதி விசேட பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்டு, பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது வைத்திய பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரையில்  720க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்