15,000இற்கும் அதிகமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை

சுமார் 15,000இற்கும் அதிகமான பொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் வரி நிவாரண நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய கட்டுமானப் பொருட்கள், உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் அரசின் வரி நிவாரண கொள்கைக்கமைய குறைக்கப்படவுள்ளன.

இந்த விலை குறைப்பு சம்பந்தமாக பொருட்களை தயாரிக்கும் மற்றும் இறக்குமதி செய்யும் நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள் அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளன.

அதற்கமைய குறித்த பொருட்களின் பெயர்கள் மற்றும் விலைகள் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட பகுப்பாய்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

எனவே குறித்த பொருட்களின் பெயர்கள் மற்றும் விலைகள் தொடர்பாக வெகு விரைவில் நுகர்வோருக்கு பத்திரிகையூடாக தெரியப்படுத்துமாறு, நுகர்வோர் விவகார அதிகார சபை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு முன்னர் பால்மா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான விலை குறைப்பை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

அதேபோல் கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வற் வரியை 8 வீதமான குறைத்தமை, தேசிய நிர்மாண வரியை நீக்கியமை ஆகியவற்றின் ஊடக கிடைத்த நன்மைகள் நுகர்வேரை சென்றடைந்துள்ளனவா என்பதை ஆராயவும் நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனை முன்னெடுக்க நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசேட விசாரணை பிரிவு ஒன்றை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்