பகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும்! – யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வலியுறுத்து

‘பகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும்
வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும்

– யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வலியுறுத்து

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நடைபெற்ற மிக மோசனமான பகிடிவதை செயற்பாடுகள் வன்மையான கண்டனத்துக்குரியன. அத்துடன், இந்தச் செயற்பாடுகள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.”

– இவ்வாறு கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“நாம் அனைத்து விதமான வன்முறைகளுக்கும் எதிரானவர்கள். வன்முறைச் செயற்பாடுகள் சமூகத்திலிருந்து முற்றாகக் களையப்படல் வேண்டும். நீண்டகாலப் போர் அதன் காரணமாக ஏற்பட்ட உடல், உள ரீதியான  வடுக்கல் என்பவற்றிலிருந்து இன்னமும் முழுமையாக மீட்சி பெறாத ஒரு சமூகத்துக்குள் பகிடிவதை என்ற போர்வையில் இடம்பெறுகின்ற வக்கிர செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.

எதிர்கால சமூகத்தில் பொறுப்புக்களை ஏற்கவுள்ள, சமூகத்தை வழிநடத்தவுள்ள படித்த இளம் சமூகத்துக்குள்   காணப்படும் இவ்வாறான வன்முறை எண்ணங்கள் தமிழ்ச் சமூகத்துக்கு ஆரோக்கியமானதாக இருக்காது.

வலிந்துதவும் தொண்டு நிறுவனமான எமது கல்வி வளர்ச்சி அறக்கட்டளையானது பல்கலைக்கழக மாணவர்களின் உயர்கல்விக்காகப் புலம்பெயர் எம் உறவுகளின் உதவியுடன் வருடந்தோறும் பெருமளவு நிதியைச் செலவழித்து வருகின்றது. விழுமியங்கள் நிறைந்த, பண்பான, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் எண்ணத்துடன் நாம் இந்தப் பணியை சிரமங்களுக்குள் மத்தியில் மேற்கொண்டு வருகின்றோம்.

அந்தவகையில் நாம் இந்தப் பகிடிவதை என்ற போர்வையில் இடம்பெறுகின்ற வன்முறைகளை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு நாம் என்றும் எமது ஆதரவை வழங்குவோம்.

பகிடிவதை என்ற பெயரில் குறிப்பாக மாணவிகள் மீது இடம்பெறுகின்ற உடல், உள ரீதியான வன்முறைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம். பல்கலைக்கழக மாணவர்கள் சமூகத்தின் முன்மாதிரிகளாக, சமூகத்தை வழிநடத்துகின்றவர்களாக இருக்க வேண்டும். வன்முறை கலாசாரங்கள் எப்போதும் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு ஆபத்தானது.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பல கனவுகளுடன் உயர்கல்விக்காகப் பல்கலைக்கழகம் அனுப்புகின்றனர். பகிடிவதையில் ஈடுபடுகின்ற மாணவர்களைக்கூட பல்கலைக்கழகத்தில் படிப்பிப்பதற்குப் பல பெற்றோர்கள் படும் துன்பங்களை நாமறிவோம்.

எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புக்களை வழங்கி கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் நாம் இந்த இடத்தில் கேட்டுக்கொள்வதோடு, பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்களும், அவர்கள் வாழ்கின்ற சமூகங்களும் பொறுப்புக்கூறுபவர்களாகவும் இருக்க வேண்டும்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்