புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

புத்தளம் கீரியங்கள்ளி – ஆண்டிகம பிரதான வீதியின் கீரியங்கள்ளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண்டிகம பிரதேசத்தில் இருந்து கீரியங்கள்ளி நோக்கி வேகமாக பயணித்த வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கீரியங்கள்ளிப் பிரதேசத்தில் உள்ள பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது வானில் பயணித்த 8 இளைஞர்களில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய ஏழு பேரும் காயமடைந்து முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சாரதிக்கு காயம் ஏற்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முந்தல் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்