பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – 65 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 65 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார்.

தடை செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் தலைமையிலான பயங்கரவாதிகள் மேற்கொண்ட இந்த தாக்குதலை அடுத்து, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் பயிற்சி பெற்ற மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 64 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட 64 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 2 பேர் பிணையில் விடுவிக்கப்பட  62 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து வாரியபொல பிரதேசத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 3 பேரையும் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 62 பேருடன் சேர்த்து 65 பேரை இன்று (செவ்வாய்கிழமை) நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பொலிஸார் கொண்டுவந்தனர்.

இவர்களை நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 14 நாட்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்