யானை சின்னத்திற்கு சஜித் பிரேமதாஸ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – எஸ்.எம் மரிக்கார்

யானை சின்னத்திற்கு சஜித் பிரேமதாஸ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கூட்டணி யானைச் சின்னத்தில் களமிறங்குவதற்கு சஜித் பிரேமதாஸ எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை கூட்டணியின் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நியமித்ததன் காரணம் என்ன? ஏனெனில், மக்கள் இவரைத்தான் விரும்புகிறார்கள். அப்படி இல்லாவிட்டால், ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்கியிருக்கலாம்.

தேர்தலுக்கான அனைத்து செயற்பாடுகளின் பொறுப்பையும் நாம் சஜித் பிரேமதாஸவுக்குத்தான் வழங்கியுள்ளோம்.

அவரது விருப்பத்தில்தான் கூட்டணியின் பொதுச் செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில், தலைவர்- பொதுச் செயலாளரின் பேச்சுக்களை மீறி வேட்புமனு தயாரிக்கப்படுவது தான் சட்டத்திற்கு முரணானது.

ஆனால், இந்தத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்க சஜித் உள்ளிட்ட அவரது தரப்பினர் தயாராகவே இருக்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்