தீமையளிக்கக் கூட நினைக்காத தமிழ் சமூகம் இன்று தீமையை நோக்கிச் செல்கிறது- வடக்கு ஆளுநர்

மற்றவர்களுக்குத் தீமையளிக்கக் கூட நினைக்காத எமது சமூகம் இன்று தீமையை நோக்கிச் செல்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

அத்துடன், யாழ். பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பகிடிவதை நடைபெற்றதாக வெளியான செய்திகள் தொடர்பாக தனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

யாழில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “வடக்கு மாகாண மக்களுக்கான சேவைகளை என்னால் மாத்திரம் தனியே முன்னெடுக்க முடியவில்லை. எல்லோருடைய ஒத்துழைப்புடன் முன்னெடுக்கவே விரும்புகிறேன்.

ஒரு விடயத்தை செய்யும் போது அதன் சாதக, பாதக விடயங்களை கலந்தாலோசித்து ஒரே பாதையில் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்போம்.

மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பெற்றுக்கொடுக்க வேண்டும். எனது குறுகிய காலத்திற்குள் மக்களுக்கான சேவைகளை துரித கதியில் முன்னெடுப்பேன். அரசியல் என்பது எனக்கு அப்பாற்பட்டது. எனக்கு ஆக்கபூர்வமான செயற்றிட்டதை முன்னெடுப்பதே எனது நோக்கம்.

யாழ்ப்பாண மக்களுக்கு கலாசாரம் சொல்லிக்கொடுக்க தேவையில்லை. ஆனால் இன்று இந்த நிலமை இங்கில்லை என்றே தோன்றுகின்றது.

தேச வழமைச் சட்டத்தின் கீழ் மற்றவர்களுக்கு தீங்கில்லாமல் வாழ்ந்த சமூகம் இன்று தீமையை நோக்கிச் செல்கின்றது. இதனையடுத்து நிறுத்துவதே எனது நோக்கம். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இதேவேளை, யாழ். பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பகிடிவதை நடைபெற்றதாக வெளியான செய்திகள் தொடர்பாக எனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை.

கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதைகள் நடைபெற்றமை குறித்து ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துகொண்டேன். அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதில் சில தடங்கல்கள் உள்ளன.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் ஒருவர் முறைப்பாடு செய்தால், அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆவன செய்வேன்.

பாதிக்கப்பட்ட தரப்பு தைரியமாக முன்வந்து முறைப்பாடு செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கினால் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும்” என அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்