பகிடிவதைக் குற்றச்சாட்டு: இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீடு மீது தாக்குதல்!

பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய மாணவன் ஒருவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர் .

இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றது.

வீட்டுக்குள் நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரில் முதலாவதாக இடைக்காலத் தடை அறிவிப்பு வழங்கப்பட்ட மாணவனின் வீடே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்