மட்டக்களப்பில் பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியருக்கு எதிராகப் போராட்டம்!

மட்டக்களப்பில் பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியரை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்ட வவுணதீவில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் ஆசிரியருக்கு எதிராகவே இன்று (புதன்கிழமை) காலை அந்தப் பாடசாலையின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பாடசாலையில் ஊழலில் ஈடுபடும் பாடசாலையின் அதிபரையும் ஆசிரியரையும் நீக்குமாறு கோரியும் பாடசாலையில் இயங்கிவரும் உயர்தரப் பிரிவினை நீக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையினை நிறுத்துமாறு வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறித்த பாடசாலையின் அதிபரும் ஆசிரியர் ஒருவரும் நீண்டகாலமாக ஊழலில் ஈடுபட்டுவருவதாகவும் பாடசாலையின் கணக்கறிக்கைகள் எதுவும் காட்டப்படுவதில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் 25 மாணவர்களுடன் பாடசாலையில் உயர்தரப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதிலும் அவற்றினை நீக்கிவிட்டு குறைந்த மாணவர்கள் உயர்தரம் கற்கும் பகுதிக்கு குறித்த உயர்தரப் பிரிவினை கொண்டுசெல்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவற்றினை உடனடியாக நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் விஜயம் செய்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்