இலங்கையுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த இஸ்ரேல் ஆர்வம்!

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு குறிப்பாக பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கு அதன் நன்கு வளர்ச்சியடைந்த தொழிநுட்ப திறன்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

நவீன விவசாயம், கல்வி, போக்குவரத்து மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகியவை இவ் ஒத்துழைப்பின் முன்னுரிமைக்குரிய துறைகளாக விளங்கும் எனவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

புது டில்லியை தளமாகக் கொண்ட இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் ரொன் மல்காவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று(புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற உரையாடலின்போதே இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை நேற்று சந்தித்த மல்கா, தனது வருகையின் நோக்கம் இரு நாடுகளுக்குமிடையிலான மேலதிக ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து ஆராய்வதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது இஸ்ரேலுக்கான தனது மூன்று விஜயங்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதாரத்தில் தெரிவு செய்யப்பட்ட துறைகளை நவீனமயமாக்க இஸ்ரேலினால் இலங்கைக்கு உதவ முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

‘தேசிய பொருளாதாரத்திற்கான பங்களிப்பையும் தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களின் எண்ணிக்கையையும் கருத்திற் கொள்ளும்போது விவசாயத்துறை எமக்கு மிகவும் முக்கியமானதாகும்.

அது பெருமளவு பாரம்பரிய முறைமைகளிலேயே தங்கியுள்ளது. விவசாயிகளுக்கு போதுமான வருமானம் கிடைக்கப்பெறுவதில்லை. அவர்கள் நீண்டகாலமாக வறுமையுடன் வாழ்கிறார்கள்.

எனவே விவசாயத் துறையை ஒரு தொழிலாக தெரிவு செய்வதற்கு இளைஞர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். எனவே போதுமான வருமானத்தை ஈட்டுவதற்கும் இளைஞர்களை ஈர்ப்பதற்கும் விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவது அவசியமாகுமென்று’ ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விவசாயத்திற்காக நவீன முறைமைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தற்போதுள்ள விவசாய செயற்பாடுகளுக்கு பெறுமதி சேர்ப்பதற்கு தனது நாட்டினால் முடியுமென இஸ்ரேலிய தூதுவர் சாதகமாக பதிலளித்தார்.

கல்வி மற்றும் தொழிற் பயிற்சித் துறையை நவீன மயப்படுத்துவதற்கும் உதவக்கூடிய இயலுமை குறித்தும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்