ஹம்பாந்தோட்டை – கொழும்பு கோட்டை வரையிலான பேருந்து சேவை இன்று ஆரம்பம்

தெற்கு அதிவேக வீதியின் ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான பேருந்து சேவை ஆரம்பமாகவுள்ளது.

குறித்த வீதி நேற்று திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக ஹம்பாந்தோட்டையில் இருந்து கோட்டை வரையிலான பேருந்து கட்டணம் 880 ரூபாய் ஆகும். தங்காலையில் இருந்து கோட்டை வரையிலான பேருந்து கட்டணம் 680 ரூபாய் ஆகும். அதேபோல ஹம்பாந்தோட்டையில் இருந்து மாக்கும்புர வரையிலான பேருந்து கட்டணம் 810 ரூபாய் ஆகும். தங்காலையில் இருந்து மாக்கும்புர வரையிலான பேருந்து கட்டணம் 610 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறக்கப்பட்ட மாத்தறை – அம்பாந்தோட்டை நெடுஞ்சாலையில் புதிதாக 10 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பேருந்துகள் மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக வீதியில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கடவத்தை வரையில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பேருந்து சேவை அம்பலாந்தோட்ட, தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இருந்து ஆரம்பமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்