தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தற்போது உள்ளவர்கள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு நேற்றுக் கூடியது. தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் டசின் கணக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றை இந்தக் குழு நேற்று ஆராய்ந்தது.

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள், எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும், எஞ்சிய இடங்களுக்கே புதியவர்கள் களமிறக்கப்படவுள்ளனர் என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கோரியவர்களை நியமனக் குழுவில் உள்வாங்கப்பட்டமை தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதிலளித்த கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, இந்தக் குழு தொடர்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னரே கருத்துக் கோரப்பட்டது எனவும், அதனைப் பயன்படுத்தாமல் இருந்து விட்டு இது தொடர்பில் இப்போது பேசுவதில் பிரயோசனமில்லை எனவும் பதிலளித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்