அரசாங்கத்தின் இயலாமையை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் – கயந்த!

நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் இயலாமை பற்றி பொதுமக்கள் கேள்வி எழுப்பிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வெங்காயத்தின் விலை உயர்வுக்கு தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்களே காரணம் என குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த மூன்று மாதங்களில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் வரி குறைப்பை நடைமுறைப்படுத்தியிருந்தாலும், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும்.

தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கோருவது அரசாங்கத்தின் இயலாமையையே வெளிப்படுத்துகின்றது.

மேலும் எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் காரணமாக, பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்க முடியவில்லை என்று அரசாங்கம் இப்போது கூறிக்கொண்டாலும், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்கிறார்கள்” என்றும் கயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்