கொரோனா என சந்தேகிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100ஐ கடந்தது!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் நாட்டிலுள்ள 15 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் 35 பேர் ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திலும் 16 பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் 13 பேர் கம்பஹா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 5 பேர் தொடர்ந்தும் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நான்கு போலந்து பிரஜைகள் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக தேசிய தொற்றுநோயியல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த குறித்த நால்வருக்கும் கோரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்டுள்ள நிலையிலேயே பரிசோதனை நடவடிக்கைகளுக்காக தேசிய தொற்றுநோயியல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள பிரஜைகளிடம் விசேட பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்