பருப்பு, மீன் ரின் விலையைக் குறைக்க ஜனாதிபதி பணிப்பு

ஒரு கிலோ கிராம் பருப்பு 65 ரூபாய்க்கும் மீன் ரின் ஒன்று 100 ரூபாய்க்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரையிலேயே அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். மேலும் இந்த புதிய விலை இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறையின்போது ஒன்றுக் கூடல்கள், பொது நிகழ்வுகள் மற்றும் களியாட்டங்களிலிருந்து முற்றாக விலகிருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு நாங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் வைரஸ்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முடியும்.

நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் தலைமைத் தாங்க வேண்டும்.

விடுமுறையின்போது நீர் பிரச்சினை மற்றும் விவசாயிகளுக்கு உரப் பிரச்சினை போன்றன இருக்கின்றன. ஆகவே, நாங்கள் சமூகத்தை கவனத்தில் கொண்டே அனைத்து முடிவுகளையும் எடுக்கவேண்டும்.

இதேவேளை, தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை உருவாக்கி புதிய வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றி உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதனால், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு என்னுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

அத்தோடு, தற்போதைய நிலையில் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அரசாங்கத்தை சீர்குலைப்பதற்கு இடமளிக்க முடியாது. தூரநோக்குடன் செயற்பட்டால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயற்பட முடியும்.

மேலும் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. இந்த நிலையில் இலங்கையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று சவாலுக்கு முகம் கொடுக்க நாங்கள் தயார்.

ஆனால், அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக மக்கள் ஆதரவளித்து செயற்பட வேண்டும். இதேவேளை, மக்களுக்கு பாதிப்பில்லாது பொருளாதாரம், சந்தை, போக்குவரத்து, வங்கி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்தோடு, இன்று இரவு முதல் 65 ரூபாவிற்கு பருப்பும் 100 ரூபாய்க்கு டின் மீன் வழங்கப்படுவதுடன் அதைப் போன்று எதிர்வரும் நாட்களில் ஏனைய மானியங்களும் வழங்கப்படும். அத்தோடு, வங்கி கடனை மீளப் பெறுவதை 6 மாதங்களுக்கு நிறுத்த வேண்டும்” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்