அத்தியவசியப் பொருட்களைக்கூட அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்கள்- மக்கள் கடும் நெருக்கடி

ஹற்றன் உட்பட மலையகத்தின் பெருந்தோட்டப் பகுதிகளை அண்டியுள்ள நகரங்களில் பெரும்பாலான வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களைக்கூட அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சில வர்த்தகர்கள் சாதாரண விலையை விடவும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்வதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில்கூட மனிதநேயமற்ற விதத்தில் நடந்து கொள்கின்றனர் எனவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கண்டி உட்பட 6 மாவட்டங்களைத் தவிர ஏனைய 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.

மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் 6 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதியது. எவ்வளவுதான் அறிவுரைகள் வழங்கப்படாலும் ஒரு சிலர் சமூக இடைவெளியையும், சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.

நுவரெலியா, மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள நகரங்களில் இந்நிலைமையைக் காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக ஹற்றன் நகரில் மக்கள் நலன்கருதி, அவர்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பாக அடிக்கடி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டதுடன், பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் நுவரெலியா, ஹற்றன், மஸ்கெலியா, பொகவந்தலாவ, கொட்டகலை, தலவாக்கலை, பூண்டுலோயா ஆகிய நகரங்களுக்கு காலை 6 மணி முதலே மக்கள் படையெடுத்து வந்தனர்.

சதொச நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், மொத்த மற்றும் சில்லறைக் கடைகளில் மக்கள் அணிவகுத்து நின்று, நீண்டநேரம் காத்திருந்து அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.

மரக்கறிச் சந்தையிலும் சனநெருக்கடி காணப்பட்டது. எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் அதிக வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சில வர்த்தகர்கள் மனித நேயத்துடன் நடந்துகொண்டாலும் பெரும்பாலானவர்கள் இலாம் எடுப்பதிலேயே குறியாக இருந்து வழமையைவிட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதையும், கட்டுப்பாட்டு விலைகளை அப்பட்டமாக மீறுவதையும் காணமுடிந்தது.

ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் என்பதாலும், வரிசையில் நீண்டநேரம் காத்திருந்ததாலும் வேறுவழியின்றி மக்களும் அதிக விலையில் பொருட்களை வாங்கிச்சென்றனர். இதேவேளை, 8 மணிநேரமே ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகளே இடம்பெற்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.