இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தை நெருங்கியது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளன.

மத்திய சுகாதாரத்துறை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ஆகப் பதிவாகியுள்ளது. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3900 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 56 ஆயிரம் பேரில் 16 ஆயிரத்து 540 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 17 ஆயிரத்து 974 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் அங்கு மொத்தமாக 694 பேர் மரணித்துள்ளனர்.

குஜராத்தில் இதுவரை 7 ஆயிரத்து 12 பேருக்கும், டெல்லியில் 5 ஆயிரத்து 980 பேருக்கும், தமிழகத்தில் 5 ஆயிரத்து 409 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3 ஆயிரத்து 252 பேருக்கும், ராஜஸ்தானில் 3 ஆயிரத்து 427 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 3 ஆயிரத்து 71 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்கும் போது புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.