ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது- செல்வம்
ஆசிரியர்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுடைய ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலைமையால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்துத் தரப்பினரும் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், தனியார் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இந்நிலையில் ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு தற்போது ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோரியுள்ளார்.
அரச அதிகாரிகள் ஆசிரியர்கள் என அனைவரும் வங்கி கடன் சுமைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கடனை மீளச் செலுத்தும் காலம் பிற்போடப்பட்டு இருந்தாலும் அந்தக்கடன் தொகைக்கான வட்டி தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
அரசாங்கம் வட்டியை நிறுத்துவதாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோரும் நிலைப்பாட்டை மாற்றி அவர்களின் சம்பளத்தை முழுமையாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை