அரசியல் கைதிகளை விடுவித்தால் மகிழ்ச்சியடைவார்கள் தமிழர்கள்! – வாய்ச்சொல்லை செயலில் காட்டுங்கள்; ராஜபக்ச அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து
“சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசு விரைந்து விடுவித்தால் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். எனவே, வாய்ச்சொல்லை – வாக்குறுதியை அரசு செயலில் காட்ட வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.
‘சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நினைக்கின்றேன்’ என்று நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார். அவரின் கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நாம் நேரில் சந்தித்து நடத்திய பேச்சில் அரசியல் தீர்வு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய விவகாரங்களை முக்கிய விடயங்களாகப் பேசியிருந்தோம். அதன்பிரகாரம் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பிரதமரிடம் சில தினங்களுக்கு சமர்ப்பித்திருந்தார். அதன்போதும் அதற்கு முன்னர் எம்முடன் நடத்திய பேச்சின்போதும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதியுடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாகப் பிரதமர் வாக்குறுதியளித்திருந்தார்.
இந்தநிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவரின் கருத்தை நாம் வரவேற்கின்றோம்; ஊக்குவிக்கின்றோம்.
தமிழ் அரசியல் கைதிகளை அரசு விரைந்து விடுவித்தால் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். எனவே, வாய்ச்சொல்லை – வாக்குறுதியை அரசு செயலில் காட்ட வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இது மரணதண்டனையை சிறையில் இருந்து அனுபவிப்பதற்குச் சமமானது. எனவே, இனியும் அவர்களைத் தடுத்துவைக்க வேண்டாம். அவர்கள் அனுபவித்த கொடிய தண்டனைகள் போதும். காலம் தாழ்த்தாது பொதுமன்னிப்பு வழங்கியாவது அவர்களை அரசு விடுவிக்க வேண்டும். அவர்களின் இருட்டறை வாழ்வுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மிகுதிக் காலத்திலாவது அவர்கள் தங்கள் சொந்தங்களுடன் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு வாழ வேண்டும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை