தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்திவைப்பு

தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்றுடன் தொடர்ந்தும் நான்கு நாட்களாக இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் நேற்று இடம்பெற்ற விசாரணையின் போது, தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர்நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.

சட்டத்தரணி சரித்த குணரத்ன மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் மற்றும் ஊடகவியலாளர் உள்ளிட்ட 07 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் மற்றும் இடை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தலைவர் மஹிந்த தேசபிரிய மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்.ஜே.அபேசேகர மற்றும் ரட்னஜீவன் ஹூல் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் புவனெக அலுவிகார, சிசிர ஆப்ரு, பியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய 05 நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதற்கும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றத்தை கூட்டப்படுவதும் அரசியலமைப்பில் கட்டாயம் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி மனுதாரர்கள் வாதிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.