ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு- 18 தொடக்கம் 20 பேர் வரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே குறிக்கோள்

வி.சுகிர்தகுமார்

  பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை முழுமையாக ஆதரிப்பதுடன் வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து 18 தொடக்கம் 20 பேர் வரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே தமது குறிக்கோள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்- ப.கோணேஸ் தெரிவித்தார்.

 ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இடம் பெற்றது.

இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்  அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிப்பது தலையாய கடமையாகும். ஏனெனில் அம்பாரை மாவட்டத்தில் தமிழரின் இருப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவருகின்றது. குறிப்பாக  இங்கு பல சேவையினை செய்துவரும் கோடீஸ்வரனை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பல சக்திகள் முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சந்தர்ப்பத்திலே எமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கட்டாயமும் எமக்குள்ளது என்றார்.
ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள். அவரால்; முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் மௌனித்தாலும் அரசியல் வழி போராட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே அவரது நோக்கம்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்கு சிங்கள தேசம்  சில நாசகார சக்திகளை தேர்தலில் களமிறக்கியுள்ளது. இதன் மூலம் தமிழர்களின் ஒருமித்த உணர்வை நீக்கி தமிழர்களை உணர்வற்றவர்களாக மாற்றுவதே அவர்களது நோக்கம்.
அவர்கள் யாரென பார்த்தால் இலங்கையில் பேசப்படும் தேசிய கட்சிகளின் தரகர்களாக முகவர்களாக இயங்குகின்றவர்களே என்பதை இத்தருணத்தில் தமிழ் மக்கள் புரிந்து கொண்டு சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்றார்.
கடந்த காலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் தங்களை தாங்கள் ஆழ்கின்ற வாழ் உரிமைக்காகவே தமது உயிர்களை இழந்தார்கள் என்பதை மக்கள் மறந்து விடாமல் அந்த பக்கத்தை உணர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதன் மூலம்  இலட்சிய கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இல்லையெனில் எமது வாழ்வு இருள் சூழந்த படுபாதாள நிலைக்கு தள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.
அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது-
தமிழையும், தமிழ் தேசியத்தையும் அம்பாறை மாவட்டத்தில் நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக ஜனநாயக போராளிகள் கட்சியினர் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்க களமிறங்கியுள்ளார்கள்.
அதன் நோக்கம் தமிழ் இருப்பை பாதுகாப்பதற்கும் தமிழர்களின் அடையாளத்தை பாதுகாப்பதுடன் தமிழர்களின் பூர்வீக நிலங்கள்,பொருளாதாரம்,கலை கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதாகும்.
மேலும் இந்த மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  வெற்றியை உறுதிபடுத்தவே களமிறங்கியுள்ளார்கள்.
வட கிழக்கிலே அதிக ஆசனங்களை பெற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேரம்  பேசும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதுடன் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பேரம் பேசும் சக்தியின் மூலம் தமிழர்களின் உரிமைகள் வட கிழக்கில் வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவும் களமிறங்கியுள்ளனர்.
அந்த வகையில் அவர்களை பாராட்டுகிறேன் என்றார்.

இதன்போது
அம்பாறை மாவட்டத்தில் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் வெகவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அம்பாறை மாவட்ட மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்க வாக்களிக்க வேண்டும் என கட்சியின் உறுப்பினர் வெல்லாவெளி பிரதேச குழு தலைவர்-; சுதா கருத்து தெரிவித்தார்-
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பக்கு வாக்களிக்க வேண்டும் என கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர் அணி சார்பாக அழகையா திருலட்சுமி கருத்த தெரிவிக்கும் போது கேட்டுக்கொண்டார்.
இதன் போது கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸ்வரன் மற்றும் கட்சின் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.