தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு பாதிப்பு மாற்று அணிகளுக்கு வாக்களிப்பதால் ஏற்படலாம்! எச்சரிக்கின்றார் எம்.ஏ.சுமந்திரன்

மாற்று அணி எனத் தெரிவித்து ஓரிரு ஆசனங்களை இலக்கு வைப்பவர்களுக்கு வாக்குகளை அளித்தால் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதோடு பலவீனமாகிவிடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) யாழில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “முக்கியமான ஒரு கேள்வியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்ற கேள்வி மக்களிடத்தில் முன்வைக்கப்படுகிறது.

கடந்த ஐந்து வருடங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதிக அபிவிருத்தித் திட்டங்கள், மக்களுக்கான செயற்றிட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்யப்பட்ட விடயங்களை மக்கள் அறிந்துகொள்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு அறிக்கைகளான நாங்கள் வெளியிடவுள்ளோம். இந்த செயற்பாட்டை அடுத்தவாரம் செய்யவுள்ளோம்.

இதேவேளை, இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஒன்று, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாட்டை மீளவும் உறுதியாக தெரிவித்துள்ளளோம். அதனை எவ்வாறு அடைய முற்படுகின்றோம் எனவும் கூறியுள்ளோம்.

இரண்டாவது, எமது மக்களின் பொருளாதார மேம்பாடு சம்பந்தமாகவும் அதைக் கையாளும் சில விடயங்களையும் முன்மொழிவுகளாக முன்வைத்துள்ளோம்.

இதேவேளை, சமகால அரசியலில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பு, தாங்கள் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதிலும், அதிலும் விசேடமாக 19ஆம் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் சிலர் 13ஆம் திருத்தச் சட்டத்தையும் மாற்ற முயற்சிக்கிறார்கள். அதற்காக மக்களிடத்தில் ஆணை கேட்கிறார்கள்.

அப்படியான சூழலில்தான் நாட்டில் ஜனநாயக சூழ்நிலையை பேணுவோம் என்று தெரிவித்துள்ளோம். இந்த விடயத்தில் முற்போக்கு சக்திகளுடனும் சேர்ந்து செயற்படுவோம் என்றும் தெரிவித்துள்ளோம்.

இந்த சூழ்நிலையில் தமிழ் மக்கள் சார்பாக தமிழ் மக்கள் அனுப்பிவைக்கிற பிரதிநிதிகள் ஒரே அமைப்பாக ஒற்றுமையாக வடக்கு கிழக்கில் இருந்து ஒரு அணியாகச் செல்வது அத்தியாவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

காரணம், மாற்று அணிகள் என்று சொல்லி எங்களுக்கும் சந்தர்ப்பம் கொடுங்கள் என்றுபலர் கேட்டு வருகிறார்கள். அவ்வாறு கேட்டு வருகின்றவர்கள் ஒரு ஆசனம், இரண்டு ஆசனத்தை இலக்குவைத்து தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள்.

இவ்வாறு, அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை மக்கள் கொடுக்கின்றபோது, அது தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாட்டை வெகுவாகப் பாதிக்கும் என்பதுடன் வெகுவாகப் பலவீனப்படுத்தும்.

ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் இன்று மக்களுடைய அபிலாசைகளை முன்னிறுத்தி பலமான அணியான 20 ஆசனங்களைக் கைப்பற்றக்கூடிய அணியாக இருக்கின்றது.

ஆகையினால், இதனை மக்கள் கருத்திற்கொண்டு தங்களுடைய பலம் சிதைந்துவிடாத வண்ணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.

நாம் எதிர்நோக்கியுள்ள அரசியல் சூழ்நிலை ஒரு அபாயகரமானது. மிகவும் சவால் நிறைந்தது. அதற்கு முகங்கொடுக்க வேண்டுமானால் நாம் ஒரு அணியாக வடக்கு கிழக்கில் இருந்து நாடாளுமன்றத்துக்குச் செல்லவேண்டியது மிக அவசியமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.