பயங்கரவாதிகளுக்கு இன அல்லது மத முத்திரையை குத்தக்கூடாது – ரணில்
பயங்கரவாதிகள் எந்த இனம் அல்லது மதக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தீவிரவாதத்தையும் பொறுத்துக்கொள்ளக்கூடாது என்றும் பயங்கரவாதிகளுக்கு இன அல்லது மத முத்திரையை குத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் மத்தியில் பயங்கரவாதிகள் உள்ளனர் ஆனால் இந்த நாட்டில் பறங்கியர்கள் மத்தியில் பயங்கரவாதிகள் இருக்கிறார்களா என்று தனக்குத் தெரியவில்லை என கூறினார்
நாம் தீவிரவாதத்திலிருந்து விடுபட வேண்டும் என்றும் தீவிரவாதமும் பயங்கரவாதமும் ஒன்றாகச் செல்கின்றன என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
மேலும் இந்த பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய சஹரானின் வீட்டை அழிக்கவும் அவர்கள் தொடர்பான தகவல்களையும் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கி உதவினார்கள் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கட்சியின் நிறுவனர் மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க ஒருமுறை இந்த நாட்டின் குடிமக்கள் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது பறங்கியர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் தங்களை இலங்கையர்களாக அடையாளம் காண வேண்டும் என கூறியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றால் COVID-19 இன் விளைவாக வேலை இழந்தவர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு மாதாந்தம் 10,000 ரூபாய் வழங்கவும், தனியார் பாடசாலைகளுக்கு உதவவும், தற்போது நாடு எதிர்கொள்ளும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை தீர்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை