என்னையும் தோற்கடித்து கட்சியையும் இல்லாமல் செய்தால் தான் ராஜபக்ஸ அரசாங்கம் விரும்பியதை செய்ய முடியும்…

என்னையும் தோற்கடித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியையும் இல்லாமல் செய்தால் தான் இந்த ராஜபக்ஸ அரசாங்கம் விரும்பியதை செய்ய முடியும் என்பதற்காகத்தான் திட்டங்களையும், சதிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள் என முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சக்தியின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து ஓட்டமாவடி எம்.பி.சீ.எஸ் வளாகத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியைத் தோற்கடித்து கல்குடா மண்ணை அநாதையாக்க சதி இடம்பெறுகின்றது. தேசிய, சர்வதேசளவில் நாமம் உச்சரிக்கப்படுகின்ற உங்கள் மகனை இந்தத் தேர்தலில் தோற்கடிக்க மஹிந்த அரசின் அடிவருடிகள் முயற்சி செய்கின்றனர்.

கடந்த காலங்களிலும் லெப்பை ஹாஜி, றியாழ் போன்றோரும் தற்போது போட்டியிடுகின்ற வேட்பாளரும் அமீர் அலியைத் தோற்கடிக்கும் நோக்கிலேயே நிறுத்தப்பட்டுள்ளனர். இதனை கல்குடா சமூகம் உணர்ந்து அதற்கான விடையைத் தருவார்களா? என்பது தான் எமக்கு முன்னாலுள்ள கேள்வியாகும்.

கடந்த காலத்தில் அமீர் அலி தோற்கடிக்கப்பட்ட போது கண்ணீர் வடித்த சமூகம், அவர் தோல்வியின் பின்னால் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களில் ஒரு வெற்றிடம் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். கட்சியின் ஆரம்பம் முதல் அதன் வளர்ச்சியில் பல்வேறு பங்களிப்புக்களைச் செய்தவர்களில் முதன்மையானவராக அமீர் அலி திகழ்கிறார். இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அமைச்சர்களிடம் சென்று கெஞ்சியதை நான் கண்டுள்ளேன். இவ்வாறு அயராதுழைத்த பெருமகன்.

இவ்வாறான ஒருவரைத் தோற்கடிப்பதற்காக சதி நடந்து கொண்டிருக்கிறது. ராஜபக்ச அரசாங்கம் அவர்களது ஏஜெண்டுகளாக ஒருவரை நிறுத்தி கலிமாச் சொன்ன எமது சமூகத்தின் வாக்குகளைப் பிரித்தெடுத்து இம்மாவட்டத்திலிருந்து முஸ்லிம்கள் எவரும் வந்து விடக்கூடாதென்ற சதியை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது.

மறுபுறம் ஒற்றுமையைப் பேசுகின்ற கட்சி இந்த அமீர் அலியை வெற்றி பெறாமல் செய்வதற்கான திட்டங்களை வகுத்து இப்பிரதேசத்திலே ஒருவரை களமிறக்கி அந்த சதியை செய்து கொண்டிருக்கிறார்கள். அமீர் அலி உங்களுக்காக மட்டுமல்ல. நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு அசம்பாவிதங்களின் போது உயிரையும் துச்சமாக மதித்து என்னோடு தன்னை அர்ப்பணித்தார்.

கல்குடாவுக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்துக்கும் முழு தேசத்துக்கும் அமீர் அலி தேவை. இவரை உருவாக்கிய கல்குடா தாய், அவரை இல்லாமல் செய்ய எடுக்கின்ற சதிகளை உணர்ந்து ஒவ்வொரு வீடு வீடாகச்சென்று அமீர் அலியின் வெற்றி தான் உங்களுடைய, உங்கள் பிள்ளைகளுடைய, இந்த சமுதாயத்துடைய இந்த தொகுதியுடைய மாவட்டத்தின் வெற்றி என்பதை உணர்த்த வேண்டிய தேவைப்பாடுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே இன, மதவாதத்தைக்கக்கி காத்தான்குடி, கல்குடா, ஏறாவூர் என பிரதேசவாத்தைப்பேசி அரசியல் செய்கின்ற கலாசாரத்தை உடைத்தெறிந்த பெருமை இவரையே சாரும். ஹிஸ்புல்லாஹ், சுபையிர் போன்றோரைக் கொண்டு வந்து இப்பிரதேச மக்களின் வாக்குகளை வழங்கி வெற்றி பெற வைத்து இஸ்லாமிய அடிப்படையில் ஒற்றுமைப்படுத்திய பெருமை அமீர் அலியையே சாரும்.

எதிர்வரும் 6ம் திகதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகின்ற போது மத, இன நல்லிணக்கத்திற்காக தமிழ் சமூகத்தை எவ்வாறு அரவணைத்து சேவைகள் செய்துள்ளார்? தமிழ் மக்கள் பட்ட துயரங்களை, கஷ்டங்களை எவ்வாறு துடைத்தெறிந்துள்ளார் என்பது பற்றி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற போது தமிழ் சமூகம் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதிலிருந்து கண்டு கொள்ள முடியும்.

எல்லோரும் வாக்களிக்கப் போகிறார்கள். இருந்தாலும், கல்குடா மக்கள் பிரிந்து விடக்கூடாது. நீங்கள் பிரிவதென்பது ஏமாறுவதென்பது இம்மண்ணையும் இப்பிரதேசத்தையும் காட்டிக் கொடுப்பதென்பது பாரிய துரோகமாகும். உலமாக்களிடம் பாரிய பொறுப்புள்ளது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமானிதத்தை குறிப்பாக உங்க ஜூம்ஆ மேடைகளை நீங்கள் இந்த சமூகத்திற்கெதிரான சாதிகள் தொடர்பில் தெளிவுபடுத்த பயன்படுத்த வேண்டும்.

இந்த தலைமையையும் கட்சியையும் அமீர் அலியையும் அழித்து இந்த சமூகத்துக்காக பேசுகின்ற குரலை நசுக்க முயல்கின்றனர். ராஜபக்ஷ அரசு கொண்டு வருகின்ற திட்டங்களை எதிர்க்கின்ற சக்திகளை அழிக்கின்ற முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

சமூகம் தெளிவு பெற வேண்டிய தேவையுள்ளது. இளைஞர் சமூகத்துக்கு தார்மீகப் பொறுப்புள்ளது. இங்கேயுள்ள கூட்டத்தைக் காண்கிற போது நிச்சயம் அமீர் அலிக்கு வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது. அதன் காரணமாகவே இவ்வளவு நேரமாக இங்கே காத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், நீங்கள் ஒவ்வொருவரும் பிரசாரர்களாக மாற வேண்டும். இப்பிரதேசம் பிரிந்து விடக்கூடாது என்பதிலே உங்களிடம் பொறுப்புள்ளது.

இந்த அமீர் அலி அடுத்த பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கத்திலே இருக்க வேண்டுமென ஆசைப்படுகின்றேன். இவரை வெற்றி பெறச் செய்கின்ற போது முஸ்லீம் சமூகத்துக்கெதிராக கொண்டு வரப்பப்டும் சாதிகளை ஒரே அணியாக நின்று வெல்லக் கூடிய வாய்ப்பாக அமையும். அதற்காக அமீர் அலி எனக்குத் தேவை.

இப்பிரதேசத்துக்கு நிறைய சேவைகளைச் செய்துள்ளார். மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் இல்லமாலில்லை. சின்ன சின்ன காரணங்களுக்காக பழி வாங்கும் நேரமல்ல இது. சதி செய்கின்ற தருமல்ல. தேர்தல் காலங்களில் பொட்டணி வியாரிகள் போன்று இங்கு வந்து ஏமாற்றுகின்ற கூட்டம் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு வேட்பாளரை புதிதாக நிறுத்தி வாக்குகளைக் கொள்ளையடித்து இப்பிரதேசத்தில் போட்டியிடும் அமீர் அலியைத் தோற்கடிக்க தொடர்ந்து செய்கின்ற சதிகளை நீங்கள் அறிவீர்கள்.

இந்த சதிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஜாஹிலிய்யத்திலுள்ள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமும் கடமையாகும். இது சமூகத்தின் விடுதலைக்காகவும் விமோசனத்திற்காகவும் உழைக்க வேண்டிய காலம். அவ்வாறு தைரியமுள்ள அச்சமில்லாது மும்மொழிகளிலும் பேசக்கூடிய ஆற்றலுள்ள இந்தத் தலைமை வெற்றி பெற வேண்டுமென்பது தான் எனது அவா. பல்வேறு வகையில் பாராளுமன்ற அனுபவத்தைக் கொண்டுள்ள இவரால் இப்பிரதேச அபிவிருத்தியை முன்கொண்டு செல்ல பிரிந்திருக்கின்ற அனைவரையும் ஒற்றுமைப்படுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

இப்புனித சமூக விடுதலைப் பயணத்தில் உங்கள் பங்களிப்பைச் செய்வதற்காக அமீர் அலியை வெல்ல வைக்க ஒன்றுபடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்;. நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் தலைமைகளை தோற்கடிக்க ராஜபக்ஸ அரசாங்கம் சதிகளை செய்து கொண்டிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதத்தைக் கக்கி, மதவாதத்தைக் கக்கி அரசியல் செய்கின்ற கலாச்சாரம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சதிகளை செய்ய இந்த அரசாங்கம் திட்டமிடுகிறது. அத்தோடு என்னை கைது செய்து சிறையில் அடைக்க சதிகளை செய்கிறார்கள்.

ஏனென்றால், என்னையும் தோற்கடித்து இந்தக் கட்சியையும் இல்லாமல் செய்தால் தான் இந்த ராஜபக்ஸ அரசாங்கம் விரும்பியதை செய்ய முடியும் என்பதற்காகத்தான் திட்டங்களையும், சதிகளையும் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த சமூகம் தெளிவாக இருந்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது.

அவர்கள் எமது ஜனாஸாக்களை எரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இது தொடர்பாக நாங்கள் அரசாங்கத்திடம் கெஞ்சிக் கேட்டோம் ஆனால் அவர்களிடத்தில் இரக்கமில்லை. அதனால் நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அவர்கள் முஸ்லிம் சமூகத்துடைய கஷ்டத்திலும் துன்பத்திலும் வேதனைகளிலும் இன்பம் காண்கிறார்கள்.

எனவே சின்னச் சின்ன காரணங்களுக்காக பிரிந்து நின்று பழிவாங்கும் காலமல்ல நமது சமூகத்துக்காக குரல் கொடுக்க கூடிய அனுபவம் கொண்ட ஆளுமை மிக்க உங்கள் அமீர் அலியை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.