தீர்வை வென்றெடுக்க ஆணை தாருங்கள்! – தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

“நியாயமான ஓர் அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் பலமான ஆணை தர வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வதேச நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் தற்போது தமிழர்களின் பக்கம் நிற்கின்றது. இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் தவறவிடக்கூடாது. சர்வதேசத்தின் ஊடாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து எமக்கான தீர்வை நாம் வென்றெடுக்க வேண்டும். அதற்கு எமது மக்களின் பலமான ஆணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகவும் அவசியம். கூட்டமைப்புக்கான அந்த ஆணையை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கிலுள்ள எமது மக்கள் வழங்க வேண்டும்.

நியாயமான ஓர் அரசியல் தீர்வை அரசு தமிழர்களுக்குத் தந்தே ஆக வேண்டும். இல்லையேல் அது பாரிய பின்விளைவுகளைக் கொண்டுவரும். அந்த நிலைமை நாட்டுக்கு உகந்ததல்ல என்று அரசுக்கு நாம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருக்கின்றோம்.

அரசியல் தீர்வு தொடர்பில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசு பின்வாங்க முடியாது.

தமிழ்த் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிங்களத் தலைவர்கள் மதிக்காமையாலேயே, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றது. அதனால் எமது போராட்டம் முப்பது வருடங்கள் ஆயுத வழியில் தொடர்ந்தது. மீண்டும் ஜனநாயக வழியில் நாம் போராடுகின்றோம். எமது இந்தப் போராட்டத்துக்கு சர்வதேசம் மதிக்கின்றது. எனவே, இலங்கை அரசும் எமது போராட்டத்தை மதித்து எமக்கான தீர்வை வழங்க வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்