எம்.பிக்கள் அனைவரும் சபையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்…

 நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் சுகாதார வழிகாட்டல் வெளியீடு
– கைலாகு கொடுத்தல், கட்டிப்பிடித்தலும் கூடாது

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் எப்பொழுதும் முகக்கவசத்தை அணிந்திருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்குக் கையளிக்கப்பட்ட, நாடாளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் முகக்கவசத்தைக் கழற்றவோ அல்லது கீழிறக்கவோ கூடாது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தச் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆசனங்களில் அமர்ந்திருக்க முடியுமாக இருக்கின்றபோதும், அவர்கள் அனைவரும் சபா மண்டபத்திலிருக்கும்போது தமக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் மாத்திரம் அமரவேண்டும் என்பதுடன், சபா மண்டபத்திலிருக்கும் சகல நேரத்திலும் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுவதற்கும் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

சபா மண்டபத்திலிருக்கும் சகல அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களும், கலரியிலிருக்கும் சகல தரப்பினரும் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என்றும் இந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்காகத் தயாரிக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்கவினால், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கையடக்கத்தொலைபேசி மற்றும் பேனை போன்ற தனிப்பட்ட கருவிகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாதிருப்பதுடன், கைலாகு கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற வாழ்த்தும் முறைகளைப் பின்பற்றாதிருத்தல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன எனவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க,  சுகாதாரப் பாதுகாப்பான முறையில் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த வழிகாட்டல் தொகுப்புத் தயாரிக்கப்பட்டிருக்கின்றது எனச் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற சபா மண்டபத்துக்குள் நுழையும் சகல வாயில்களிலும் கிருமி நாசினி திரவம் வைக்கப்படுவதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் சபா மண்டபத்துக்குள் நுழைய முன்னர் தமது கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தமது ஆசனங்களில் அமரமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, நாடாளுமன்றத்தை கொரோனாத் தொற்று சவாலிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன எனவும், இது சுகாதார அமைச்சால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது வழிகாட்டல் தொகுப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற சபா மண்டபம், உறுப்பினர்களின் முகப்புக் கூடம், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்கான கலரிகள், உறுப்பினர்களின் உணவுக் கூடம், நூலகம் என்பவற்றை உள்ளடக்கும் வகையிலும், போக்குவரத்துப் பிரிவு மற்றும் பராமரிப்புப் பிரிவினர் செயற்படவேண்டிய முறைகள் போன்றவற்றை உள்ளடக்கிய வகையிலும் இந்தச் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்காகத் தயாரிக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கும் நிகழ்வில், பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம் உள்ளிட்ட நாடாளுமன்றத் திணைக்களப் பிரதானிகளும் கலந்துகொண்டனர்.
…..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்