தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்தாண்டு நிச்சயம் நினைவேந்தல் இடம்பெறும் – சாணக்கியன் உறுதி…

தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்தாண்டு நிச்சயம் நினைவேந்தல்
இடம்பெறும் – சாணக்கியன் உறுதி!

தாண்டியடி பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்தாண்டு
நிச்சயம் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறும் என தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன்
தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – தாண்டியடி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே
அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் எனது சுயநலம் சார்ந்து
சிந்திப்பவன் இல்லை. கடந்த காலங்களில் நான் பல்வேறு அபிவிருத்தி பணிகளை
மட்டக்களப்பு மாவட்டம் ழுமுவதும் செய்துள்ளேன்.

குறிப்பாக எமது எதிர்கால சந்ததியினரான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு
பல்வேறு வகையான உதவி திட்டங்களை வழங்கியுள்ளேன்.

இன்று, நேற்று அல்ல மிக நீண்ட காலமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை
எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்பது குறித்து சிந்தித்து வருகின்றேன்.

உங்களுக்கு தெரியும், தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும்
செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் மிகவும் நுட்பமான முறையில் முன்னெடுத்து
வருகின்றது. இன்று கிழக்கு மாகாணத்தில், சில விடயங்களைக் கவனமாகச்
சிந்திக்க வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில், சிங்கள நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவம்
இருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில், சிங்கள நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்
இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே, சிங்கள நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்
இல்லை. இது தென்மாகாணத்தில் இருப்பவர்களுக்குப் பெரிய தாக்கமாகும்.
தொல்பொருள் ஆராய்ச்சிக்கான செயலணி, கிழக்கு மாகாணத்தில்
உருவாக்கப்பட்டதற்குக் காரணம், கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின்
விகிதாசாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காக ஆகும்.

அதேபோன்று கடந்த சில வருடங்களாக தாண்டியடி பகுதியில் உள்ள மாவீரர் துயிலும்
இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவில்லை என்பது கவலையளிக்கின்றது.
அடுத்தாண்டு தடைகளை மீறி நிச்சயம் இந்த பகுதியில் மாவீரர் நினைவேந்தல்
நிகழ்வு நடைபெறும் என்பதனை உறுதியுடன் கூறிக்கொள்கின்றேன்.

எந்த தடை வந்தாலும் அந்த தடைகளை மீறி நானே முன்னின்று இந்த நிகழ்வுகளை
நடாத்திக்காட்டுவேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எமது மண்ணுக்காக தங்கள் உயிர்களை ஆகுதியாக்கியவர்களுக்கு நிச்சயமாக நாங்கள்
மரியாதை செலுத்த வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.