வாய்வீச்சு அரசியலை செய்துவரும் முஸ்லிம் காங்கிரஸ்…

வெறும் வாய்வீச்சு அரசியலை செய்துவரும் முஸ்லிம் காங்கிரஸும் அதன் தற்போதைய
வேட்பாளர்களும் தங்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பங்களைத் தவற விட்டுவிட்டு
மீண்டும் மக்களை ஏமாற்ற தலைப்பட்டுள்ளனர் என தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல
மாவட்ட வேட்பாளரும் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம் சலீம்
தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அவரது தேர்தல்  அலுவலகத்தில் புத்திஜீவிகள் மற்றும் தேர்தல்
செயற்பாட்டாளர்களுக்கிடையில் நடைபெற்ற  கலந்துரையாடலின் போதே தனது தேர்தல்
விஞ்ஞாபனம் குறித்து விளக்கும்போது மேற்படி கருத்தினை தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது புத்திஜீவிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  பதிலளித்து அவர்
கருத்து வெளியிடுகையில்,

எமது தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிப்பது தொடர்பில் இப்பிரதேசத்தில் உள்ள துறைசார்
நிபுனர்களை அணுகி கடந்த ஆறு மாத காலமாக பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள்
செயற்பாடுகளை  மேற்கொண்டு அம்பாரை மாவட்டத்தில் எம்மால் நிறைவேற்றக்கூடிய
சாத்தியவள ஆய்வு ஒன்றினை மேற்கொண்டோம்.

அந்த ஆய்வின் பலனாக பல்வேறுபட்ட தேவைகள் அடையாளப்படுத்தப்பட்டு நமது சக்திக்கு
உட்பட்டு நிறைவேற்றக்கூடிய முன்னுரிமைப்படுத்தப்பட்ட 12 தேவைகளை குறிப்பிட்ட
காலத்திற்குள் மக்கள் நேய நலனுடன் நிறைவேற்றுவது என திடசங்கற்பம் பூண்டோம்.

குறிப்பாக இந்த மாவட்டத்தில் அதிகாரம் செலுத்திய கட்சிகள் ஏற்படுத்திய
அபிவிருத்தி இடைவெளியினை உணர்ந்தோம். பில்லியன் கணக்கில் பணம் கொண்டு வருவதாக
மக்களை ஏமாற்றியவர்கள், உண்மையாக நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறுபட்ட தேவைகளை
நிறைவேற்ற தவறி இருந்தனர். குறிப்பாக கல்முனைப் பிராந்தியத்தில் புராதன
காலத்து நினைவுச் சின்னங்கள் போல் பொதுநிர்வாக கட்டடங்கள், மைதானங்கள்,
சந்தைகள், பஸ்தரிப்பு நிலையம், அடிப்படை வசதிகள் போன்ற பல அபிவிருத்தித்
திட்டங்கள் முறையாகத் திட்டமிடப்படாமலும் பொடுபோக்குத்தனமான அரசியல்
செயற்பாடுகளாலும் திறன் அற்ற சோம்பல் அரசியல்வாதிகளாலும் முஸ்லிம்களின்
தலைநகர் என்று போற்றப்படும் முக வெற்றிலை என்று அழைக்கப்படும் கல்முனை
மாநகரினை காணும்போது மிகுந்த வேதனை அளித்தது.

மறைந்த தலைவரின் கனவான கல்முனை மாநகர அபிவிருத்தி திட்டம்
முதன்மைப்படுத்தப்பட்ட ஒரு இலக்காக அடையாளப்படுத்தப்பட்டது. அதேபோல
விளையாட்டுத்துறை, மருத்துவம், கல்வி, தொழில்துறை, உயர் கல்வி, விவசாயம், நமது
கலை கலாசார பண்பாட்டு ஆவணப்படுத்தல், காணிப்பிரச்சினைகள், மீன்பிடி, இளைஞர்
விவகாரம், பெண்களின் வாழ்வாதாரம், நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள்
ஊக்குவிப்பு, உள்ளூராட்சி விவகாரங்கள், அரச பணியாளர்கள் மற்றும் பட்டதாரிகளின்
பிரச்சினைகள் போன்றவற்றை முதன்மைப்படுத்தி நிறைவேற்றப்பட வேண்டிய இலக்குகளை
நிர்ணயம் செய்துள்ளோம்.

இன்ஷா அல்லாஹ்,  இலக்குகளை வெற்றிகொண்டு மக்களுக்கு பரிசாக அளிக்க
இதயசுத்தியுடன் எண்ணி உள்ளேன். கடந்த காலங்களில் எமது பிரதேசத்தில் அரசியல்
அந்தஸ்துகளை அனுபவித்து அப்பாவி மக்களின் வாக்குகளால் பதவிகளை
அலங்கரித்தவர்கள் அப்பதவிகளைக் கொண்டு மக்களின் அமானிதத்தை துஷ்பிரயோகம்
செய்துள்ளார்கள் என்பதை சாதாரண பாமரர்களுக்கும்கூட தெளிவாக புரியும்.
இந்நிலையிலேயே எனது பிரதேசமும் எமது மாவட்டமும் காணப்படுகின்றது.

குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் செய்யப்பட்ட பெறுமதியான பல சேவைகள் தேசிய
காங்கிரஸின் தேசிய தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களாலேயே
செய்யப்பட்டது. உதாரணமாக சாய்ந்தமருதில் பிரதேச செயலக கட்டிடம், வைத்தியசாலை
கட்டிடம், புதிதாக ஒரு பெறுமதியான பாலம்,  நீர்வழங்கள் பிரதேச பொறியியலாளர்
காரியாலயம், பாடசாலைக் கட்டிடங்கள், காபட் வீதிகள், விளையாட்டுக்
கழகங்களுக்கான நிதிகள், பள்ளிவாசல்களுக்கான நிதிகள், நீர்ப்பாசன விருத்தி,
தொழில் வாய்ப்பு போன்ற பல நிலைபேறான அபிவிருத்திகளைச் செய்துள்ளார். இப்பிரதேச
மக்கள் சொற்ப வாக்குகளை அளித்தபோதும் எதுவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நமது
பிரதேசத்திற்கு அபிவிருத்திகளைச் செய்து காட்டியுள்ளார்.

அதேபோல் காரைதீவு அம்பாறை வீதியின் மாவடிப்பள்ளியில்  வெள்ள அபாயத்தினால்
மக்கள் எதிர்நோக்கிய சிரமத்தை அறிந்து பல்வேறுபட்ட அரச மற்றும் அரச சார்பற்ற
நிறுவனங்களை அணுகி ஜப்பானிய நிறுவனமான JICA ஊடாக நேர்த்தியான முறையில்
பாலமொன்றை அமைத்து மிகப்பெரும் தேவையொன்றை நிறைவேற்றினார்.

அத்துடன் நானறிந்த வகையில் சம்மாந்துறை பிரதேசத்தில்
பல்வேறுபட்ட சேவைகளை செய்தார். குறிப்பாக கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ
அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாக நெய்னாகாட்டில் ஒரு பாலத்தை
அமைத்ததன் மூலமாக இன்று குடுவில் பிரதேசம் ஊடாக  இறக்காமம் மற்றும் இதர
பிரதேசங்களுக்கு சம்மாந்துறை மக்கள் மாத்திரமல்ல ஏனைய மக்களும் இலகுவாக
பயணிக்கக் கூடியதாக உள்ளது.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின்
கட்டடங்களையும் அழகான முறையில் வடிவமைத்துக் கொடுத்தார். கல்முனையில்
மாத்திரம் அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இந்த விடயத்தை தடுத்தனர்.
மேலும்  தமிழ் பிரதேசங்கள், சிங்களப் பிரதேசங்களில்  இன, மத, மொழி, பிரதேச
வேறுபாடின்றி சேவையாற்றினார்.  இதற்கு சான்றாக இன்று சிங்கள மக்கள் எங்கள்
அமைச்சர் என உரிமையோடு அதாஉல்லா அவர்களை கிழக்கு வாசலில் தேடி வந்து
வாழ்த்துக் கூறிச் செல்கின்றனர்.

எனவே வெறும் வாய்வீச்சு அரசியலை செய்துவரும் முஸ்லிம் காங்கிரஸும் அதன்
தற்போதைய வேட்பாளர்களும் தங்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பங்களைத் தவற
விட்டுவிட்டு மீண்டும் மக்களை ஏமாற்ற தலைப்பட்டுள்ளனர்.  எமது தலைமை
அதாஉல்லாஹ், மேடைகளில் பில்லியன் கணக்கில் செலவழிக்க இருப்பதாக கூறி
ஒருகாலமும் வாக்கு கேட்கவில்லை. மாறாக பில்லியன் கணக்கில் மக்களுக்காக
அபிவிருத்திப் பணிகளை செவ்வனே நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். அதேபோல எனது
சேவைக்காலத்தில் கிடைத்த சந்தர்ப்பங்களை உச்சமாக பயன்படுத்தி வினைத்திறனான
விளைதிறனான அபிவிருத்திகளைச் செய்து காட்டியுள்ளேன்.

எனவே எமது இலக்குகளை அடைவதாயின் எமது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை இந்த
மாவட்டத்தில் பெறுவதன் ஊடாக இலகுவாக அடைந்துகொள்ள முடியும். மேலும் எங்களது
வாக்கு பலத்தை முறையாக பிரயோகிக்கும்போது ஆளுமையுள்ள மக்கள்
பிரதிநிதிகளை,மக்கள் தொண்டர்களை, மக்களைப் பற்றி சிந்திக்கின்றவர்களை,
எதிர்வரும் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலம் எமது மாவட்டத்தினை
தலைநிமிரச் செய்யலாம்.

அதனால்தான் எமது நிபுனர் குழுவினதும் எனதும்  ஆலோசனைக்கும் அமைவாகவும் “தலை
நிமிரட்டும் திகாமடுல்ல” என்று தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு இருந்தோம்
என்பதுடன் இன்னும் பல விடயங்களையும் மக்கள் நலன்சார் தேவைகளையும் நிறைவேற்ற
திட்மிட்டிருப்பதாகவும் கூறி தனது தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான தெளிவான
விளக்கவுரை ஒன்றினை  புத்திஜீவிகள் மற்றும் தேர்தல் செயற்பாட்டாளர்கள்
மத்தியில் வேட்பாளர் ஏ.எல்.எம் சலீம் அவர்கள் தெளிவுபடுத்தினார் என்பது
குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.