அடக்குமுறையாளர்களின் கைகளுக்குள் ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டால் மலையகத்தில் மாற்றம் வராது – பழனி திகாம்பரம் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்)

அடக்குமுறையாளர்களின் கைகளுக்குள் ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டால் மலையகத்தில் மாற்றம் வராது. எனவே, மலையகத்தில் மறுமலர்ச்சிக்கான தளத்தை உருவாக்கிய தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு பேராதரவு வழங்கி ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலர ஒத்துழைப்பு வழங்குங்கள் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

லிந்துலை மவுஸ்ஸாஎல்ல பகுதியில் 02.08.2020 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

” பிரச்சாரங்களின்போது எமக்கு மக்கள் முழு ஆதரவையும் வெளியிட்டனர். 5 ஆம் திகதிவரை இந்த ஆதரவு தொடரவேண்டும். வாக்களிப்பு தினத்தன்று தொலைபேசி சின்னத்துக்கு முன்னால் புள்ளடியிட்டு, மூன்று விருப்பு வாக்குகளையும் எம்மூவருக்கும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். குறைகூறி வாக்கு கேட்கவில்லை, மாறாக நான்கரை வருடங்கள் சேவை செய்து விட்டு வந்தே ஆணைகோருகின்றோம்.

மலையக மக்களின் ஆதரவானது ஏமாற்றுபவர்களின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது. எம்மைபோன்ற நல்லவர்கள் அங்கம் வகிக்கும் முற்போக்கு கூட்டணியின் கைகளுக்குள்ளேயே அதிகாரம் வர வேண்டும். இதனை மக்கள் வழங்குவார்கள் என நம்புகின்றோம்.

நான்கரை வருடங்களில் மலையகத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்திருந்தாலும், எதனையும் செய்யவில்லையென 80 ஆண்டுகள் சும்மா இருந்தவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

நாம் வென்றாலும், தோற்றாலும் மக்களுடன்தான் இருப்போம். ஆனால், ஏனையோர் இங்கிருந்து ஓடிவிடுவார்கள். இந்த அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் கிடைத்தால் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும். இதனால் தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, அடக்குமுறை அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி ஜனநாயக ஆட்சியை மலரச்செய்வதற்காக தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த பின்னர் மலையகத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்களை நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்.” – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.