பொதுத் தேர்தலில் மோசடி! – ராமநாயக்க பரபரப்புக் குற்றச்சாட்டு

நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் மோசடிகள் நடந்திருக்கலாம் என்ற பரபரப்புத் தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிரபல சிங்கள நடிகர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே இலங்கையில் ஆட்சிக்கு வரவேண்டிய தலைவர்களைத் தெரிவுசெய்து அதற்கான சூழலையும் உருவாக்கிக் கொடுத்து வருகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“மிகவும் மோசடிகள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் உள்ள இலங்கையில் தேர்தல் என்பது சுதந்திரமானதும், நீதியானதுமாக நடந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை மக்கள் மிகவும் அப்பாவிகள்.

இங்கு ஆட்சியிலிருக்க வேண்டியவர்களைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்களாக அல்லது அனுசரணையாளர்களாக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் உள்ளன.

2015ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியப் பிரதமர் மோடியின் வலதுகை என்று அடையாளப்படுத்தப்படும் உயர் அதிகாரி ஒருவர் அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்துக்குத் தனிப்பட்ட விமானத்தில் வந்தபோது நாமல் ராஜபக்ச அவரை வரவேற்றார். இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகத் தெரிவாவார் என்பதை அவர் தெரிவித்திருந்தார். அது நடந்தது.

இன்று அமெரிக்கப் பிரஜையாக இருந்த கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகியுள்ளார். தற்போது மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் இருப்பதால் விரைவில் அமெரிக்காவுடனான எம்.சி.சி. ஒப்பந்தத்தில் அரசு கைச்சாத்திடும்.

இந்தியாவுக்குக் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனை வழங்கப்படும். அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்குச் சொந்தமாகும். அதேவேளை, எனது மாமனாரான விஜய குமாரதுங்கவின் காலத்தில் நடந்த தேர்தலில் மூன்று முறை மீள்வாக்கெண்ணல் இடம்பெற்றது. அந்த மூன்று தடவைகளிலும் மூன்று முறையும் மின்வெட்டு ஏற்பட்டு அவருக்கான வாக்குகள் சூறையாடப்பட்டன.

அதேபோல், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கடந்த காலங்களில் படுதோல்வியடைந்த அட்மிரல் சரத் வீரசேகர இம்முறை விமல் வீரவன்சவை முந்திக்கொண்டு கொழும்பில் முதலிடம் வந்துள்ளார். பிரசன்ன ரணதுங்கவை தோல்வியடையச் செய்த கோட்டாபயவின் நண்பர் நாலக்க கொடஹேவா கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் வென்றார். அவர்கள் கைகளில் பொதுத் தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரும் முன்னரே முடிவுகள் வந்து கிடைத்தன. வாக்குகளை மீள் எண்ணுமாறும் கேட்டுக்கொண்டனர். மோசடிகள் அரங்கேறியிருக்கலாம் என்பதே எனது கணிப்பாகும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்