19 ஆவது திருத்தம் அகற்றப்பட்டால் ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் அச்சுறுத்தலாகவே அமையும்

சர்வாதிகார ஜனாதிபதித்துவ ஆட்சிமுறையிலிருந்து மக்களை மீட்டெடுத்து ஜனநாயகத்தினையும், மக்களின் உரிமை, சுதந்திரங்களையும் பலப்படுத்தும் நோக்கிலேயே 19 ஆவது அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தற்போது இத்திருத்தம் அகற்றப்படுமாக இருந்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் அச்சுறுத்தலாகவே அமையும். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக மட்டு ஊடக மையத்தில் இன்று (20.08.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவிதியை தனியொரு ஜனாதிபதி நிர்ணயிப்பது ஓர் ஜனநாயகத்திற்கு மாறான சர்வதிகாரமாகவே கொள்ள முடியும். 19ஆவது திருத்தத்திற்கு முன்னர் 6 வருடங்கள் மக்கள் சேவைக்காக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தினை ஒரு வருடம் நிறைவடைந்த பின்னர் ஜனாதிபதியால் கலைத்து விட முடியும்.

அதே போல் ஒரு ஜனாதிபதி எத்தனை தடவையும் ஜனாதிபதியாக பதவியில் அமரலாம். பாராளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கலாம் என அதிகாரங்கள் குவிக்கப்படிருந்தன.

1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவர் ஆணைப் பெண்ணாகவோ, பெண்ணை ஆணாகவோ மற்ற முடியாது அது தவிர்ந்த அனைத்தையும் செய்ய இயலுமான நிலை இருந்தது. ஆனால் 18ஆவது திருத்ததோடு அவையனைத்தையும் செய்ய முடியுமான நிலையே காணப்பட்டது. அந்நிலையை 19ஆவது திருத்தம் மாற்றியமைத்திருந்தது.

குறிப்பாக நீதித்துறையை தனக்கு விரும்பியபடி ஆட்டிப்படைக்கும் வல்லமையை ஜனாதிபதி கொண்டிருந்தார். இதன் ஊடாகவே தமக்கு விரும்பிய சில சட்டங்களை நிறைவேற்ற தடையாக இருந்த பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்திருந்தார்.

இவற்றுக்கெல்லாம் முடிவுகட்டி ஜனநாயகத்தினைப் பாதுகாக்கும் நோக்கிலேயே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. 17ஆவது யாப்புத் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்ட சுயாதீன ஆணைக் குழுக்களான தேர்தல் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு என்வற்றை மஹிந்த ராஜபக்ஸ 18ஆவது யாப்புத் திருத்தம் மூலம் இல்லாமலாக்கினார். ஆனால் 19ஆவது திருத்தத்தின் மூலம் மீண்டும் குறித்த சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதுடன் இதற்கும் மேலதிகமாக புதிதாக கணக்காய்வு ஆணைக்குழு, மற்றும் பெறுகை ஆணைக்குழு என்பனவும் உருவாக்கப்பட்டன.

அதுமட்டுமல்ல பழைய முறைமையில் ஜனாதிபதிக்கு எதிராக எவ்விதமான வழக்குத் தாக்கலும் செய்ய முடியாது என்றே இருந்தது. ஆனால் 19ஆவது திருத்தத்தில் தனிமனித உரிமை மீறல் தொடர்பான விடயங்களுக்காக ஜனாதிபதிக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்ற சரத்து இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கும் மேலதிகமாக சபாநாயகரின் தலைமையில் அரசியலமைப்பு பேரவையும் உருவாக்கப்பட்டு அதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்திருந்தனர்.

இப்படிப்பட்ட ஜனநாயக முறைமைகளை எல்லாம் இல்லாதொழித்து மீண்டும் சிறுபான்மை இனங்களை அடக்கி ஓர் சர்வாதிகார, குடும்ப ஆட்சியினை தொடர்வதற்காகவே 19ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்படவுள்ளது. இதற்கு சிறுபான்மையினக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.