மாடுகள் இறைச்சிக்கு வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும்…

பிரதமர் மகிந்த இராசபக்ச மாடுகள் இறைச்சிக்கு வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என அண்மையில் தெரிவித்திருந்தார். அதனால் ஏற்படும் இறைச்சித் தட்டுப்பாட்டை ஈடுசெய்வதற்கு மாட்டிறச்சி வெளிநாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் பாரதிய ஜனதா அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு மாடுகள் இறைச்சிக்கு வெட்டப்படுவதை தடை செய்து சட்டம் இயற்றியது. ஆனால் இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றம் அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
இந்துக்களும் பவுத்தர்களும் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்பது விதி. இதற்கு ஒரு வலுமையான காரணம் உண்டு. பண்டைய காலத்தில் மாடுகள் உழவுத் தொழிலுக்கு அத்தியாவசியமாக இருந்தன. பசுக்கள் பால் கொடுத்தன. அவற்றை சாப்பிடுவதற்குக் கொன்றால் உழவுத் தொழில் பாதிக்கும் என்பது முக்கிய காரணம்.
பவுத்தம் இந்து மதம் போலவே கொல்லாமையை வலியுறுத்துகிறது. ஆனால் இரண்டுக்கும் இடையில் ஒரு சின்ன வேற்றுமை.
பவுத்தர்கள், குறிப்பாக பவுத்த தேரர்கள், தங்களுக்கு என்று நேரடியாக மாடு, ஆடு, கோழி போன்றவற்றை கொன்று சமையல் செய்தால் சாப்பிடக் கூடாது. இல்லாவிட்டால் சாப்பிடலாம். புத்தரே பன்றி இறைச்சி சாப்பிட்டு அதனால் வந்த உபாதையால் தனது 80 ஆவது வயதில் இறந்தார் எனச் சொல்லப்படுகிறது.
இந்துக்களும், குறிப்பாக பிராமணர்கள், வேத காலத்தில் மாடு, ஆடு, உடும்பு போன்ற பிராணிகளை வேள்விக் குண்டத்தில் போட்டு அக்கினியில் வாட்டிய பின்னர் உண்டார்கள். ஆனால் பிற்காலத்தில் கொல்லாமையை வலியுறுத்திய பவுத்தம், சமணம் போன்ற சமயங்களின் செல்வாக்கால் மாமிசம் சாப்பிடுவதை பிராமணர்கள் நிறுத்திக் கொண்டார்கள்.
இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை தடைசெய்ய மகிந்த இராசபக்ச நினைப்பது முஸ்லிம்களை குறிவைத்து என்று சொல்கிறார்கள். ஏனால் இந்தத் தொழிலில் 90 விழுக்காடு முஸ்லிம்களே ஈடுபடுகிறார்கள்.
இந்தச் சிக்கலுக்கு ஒரேயொரு வழி எல்லோரும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்துவதுதான்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.