உடன் அமுலுக்கு வரும் வகையில் கல்முனை பிராந்தியத்தில் சகல பொதுகூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு தடை…

கல்முனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை மீண்டும் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்மந்தமாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தெளிவூட்டும் நிகழ்வு இன்று(6) கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கு.சுகுனன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்மந்தமாக பின்வருமாறு தெளிவுபடுத்தினார்.

பொது மக்கள் சகலரும் முகக் கவசம் கட்டாயமாக அணிந்து இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு அணியாதவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் வியாபார ஸ்தலங்களில் சமூக இடைவெளி பேணப்பட்டு முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும் குறித்த கடைகளில் முகக்கவசம் அணியாதவர்கள் காணப்பட்டால் உடன் அந்த வியாபார நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தூர பிரயாணங்கள் மேற்கொள்வோர் குறிப்பாக வெளி மாவட்டங்களுக்கு தொழிலுக்காக மற்றும் ஏனைய விடயங்களுக்காக செல்லுவோர்கள் உடன் சுகாதார திணைக்கள பிரிவினரின் அனுமதி பெற வேண்டும் என்பதோடு சகல விதமான ஒன்றுகூடல்கள்,திருமண நிகழ்வுகள்,டியுசன் வகுப்புகள் அனைத்தும் சமூக இடைவெளிகளோடு,முகக்கவசம் அணிந்து குறித்த தொகையினர் மாத்திரம் உள்ளடக்கியதாக நடத்தப்பட வேண்டும் என்றும் மேலும்,மத ஸ்தாபனங்களில் கடந்த காலங்களில் பேணப்பட்டு வந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், வெளியில் தேவையில்லாமல் செல்லுவது,களியாட்ட நிகழ்வுகள் அனைத்தும் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்

மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இன்று மருதமுனை பிரதேசத்தில் இணங்காணப்பட்ட வாகன சாரதியின் PCR பரிசோதனை முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக இருக்கின்றது அந்த முடிவு நெகடிவ்வாக அமைந்தால் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதன் முடிவு பொசிடிவ்வாக அமையும் பட்சத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக அமுல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்முனை இராணுவ மேஜர் எம்.கே.எம்.ஆர்,தேசப்பிரிய,கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த,கல்முனை மாநகர சுகாதார வைத்திய அதிகாரி எம்.கே.எம்.ஆர் காரியப்பர்,கல்முனை பிராந்திய தொற்று நோய் வைத்திய அதிகாரி டாக்டர் நாகூர் ஆரீப், தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஐ,றிஸ்னி,கல்முனை பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,கல்முனை பிரதேச பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.