மறைந்திருக்கும் ஊழியர்கள் சரணடைய இன்று காலை 10 மணி வரை அவகாசம்! – இராணுவத் தளபதி தெரிவிப்பு…

“மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கடமை புரிந்து இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்படாதவர்கள் பொலிஸ் நிலையங்களில் சரணடைய  இன்று காலை 10 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.”

– இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுயான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் கொத்தணி, வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர் அல்லது குழுவின் கவனயீனத்தால் உருவாகியிருக்கலாம்.

சமூகத்தில் உள்ள தொற்றாளர் ஒருவரின் மூலம் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்குத் தொற்று பரவியிருக்க எந்தவித வாய்ப்பும் இல்லை.

வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது” – என்றார்.

இதேவேளை, நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தைத் தொடர்ந்தும் அமுல்படுத்த எதிர்ப்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கூடிய விரைவில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.